சென்னை: பெசன்ட் நகர் பகுதிக்குள்பட்ட ஒடைமாநகர் பகுதியில், நேற்று (ஜூலை 19) மாலை சிலர் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.
அப்போது கடற்கரை ஓரமாக 5 சிலைகள் ஒதுங்கி கிடந்தன. இந்தச் சிலைகள் சுமார் அரை அடி உயரத்தில் இருந்தன. அதில் ஒன்று அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆகும். மற்றவை பீடம், அனுமன் சிலை மற்றும் 2 யானை சிலைகள் ஆகும்.
இதில் அனுமன் சிலையின் மீது 1875 என்று வருடம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருகில் உள்ள பழண்டி அம்மன் கோயிலின் உள்ளே வைத்துவிட்டு, காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சாஸ்திரிநகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிலைகளை கண்டெடுத்த பொதுமக்களிடம் சிலைகளை ஒப்படைக்கும்படி கேட்டுள்ளனர். அப்போது மறுப்பு தெரிவித்த பொதுமக்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் வந்து பொதுமக்கள் முன்னிலையில் விசாரணை நடத்தி அதன் பின்னரே எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வேளச்சேரி தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினார். கடற்கரை ஓரம் சிலைகள் ஒதுங்கியிருந்ததால், கடல் மார்க்கமாக ஏதேனும் கும்பல் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சிலைகளை கடத்த முயற்சி செய்துள்ளனரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: கூரியர் நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருட்டு!