சென்னை: நந்தனத்தில் இயங்கி வரும் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில், தமிழ்நாடு மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், கடலோரத்தில் 200 மீட்டருக்குள் இறால் போன்ற நீர்வாழ் உயிரின வளர்ப்பு, குஞ்சு பொரிப்பகங்களை நிறுவுவதற்கும், இயங்குவதற்கும் விலக்கு அளித்ததை திரும்பப் பெற வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளரிமிடம் பேசிய பாரதி கூறியதாவது,
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டத்தில் உயர் அலை கோட்டிலிருந்து 30 மீட்டரில் இறால் வளர்ப்பு நடைபெற்று வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு, கடலூர், மாவட்டங்களில் இறால் வளர்ப்பு அதிகமாக காணப்படுவதால், மறுசுழற்சி செய்யப்படாத நீர் கடலில் கலக்கிறது.
இதன் காரணமாக கடலில் இனப்பெருக்கம் செய்யும் மீன்கள் இறக்கக்கூடும். இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் பாதிக்கப்படுவார்கள்.கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆணையில், உயர் அலை கோட்டிலிருந்து 200 மீட்டருக்குள் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு குஞ்சு பொரிப்பகங்கள் நிறுவுவதற்கும், இயங்குவதற்கும் விலக்கு அளித்து அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “கடலோர நீர்வாழ் உயிரினங்கள் கடலோரத்தில் வளர்க்கப்படும்போது கடல் நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துகின்றனர். ஆனால், இறால் வளர்ப்புக்குப் பயன்படுத்திய நீரை சரியாக சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே கடலில் விடுவதால் மீன்கள் மடிகின்றன” என குற்றஞ்சாட்டினார். தற்போது மனு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் மீனவர் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீனவர்கள் தடைக்கால நிவாரண நிதியை ரூ.10,000 ஆக உயர்த்த கோரிக்கை!