சென்னை: திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் வேளாண்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி நடப்பு கூட்டத் தொடரில் வேளாண் துறைக்கு என தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர் கே. பன்னீர் செல்வம் வரும் 14ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
கடந்த அதிமுக ஆட்சியில், 2020- 21 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண்துறைக்கென 11 ஆயிரத்து 894.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2019 -20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 10 ஆயிரத்து 550.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2021- 22 ஆம் ஆண்டுகான நிதிநிலை அறிக்கையில், 11 ஆயிரத்து 982 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது.
கரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் வேளாண்துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில், தற்போது 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வேளாண் துறைக்கு தனியாக தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம்
வேளாண் நிதி நிலை அறிக்கையில் இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தற்போது ஐந்து முதல் ஏழு விழுக்காடு விவசாயிகள் மட்டுமே இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கரோனா பேரிடர் காலம், இயற்கை விவசாயத்தின் தேவையை நாம் நன்கு உணர்த்தியுள்ளது. சத்தான நோய் எதிர்ப்பு சக்தி உடைய நஞ்சில்லா உணவினை இயற்கை விவசாயமே நமக்கு தந்தது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, இந்த நிதி நிலை அறிக்கையில் அதிக அளவில் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் சமூக பொருளாதாரம் மேம்படும் என்பதை உணர்ந்து, இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
அதே போல, இயற்கை விவசாயம் செய்யும் சிறு, குறு விவசாயிகள் அரசின் பதிவு செய்த சான்றிதழ் பெறுவதில் உள்ள தடைகளை நீக்கி, அதனை எளிமைப்படுத்தி தர வேண்டும் என பாரதிய கிசான் சங்கத்தின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய விதைகள் கிடைக்க வழிவகை
"பாரம்பரிய மற்றும் உள்நாட்டு விதைகள் இன்றைக்கு வெளிச்சந்தையில் மட்டுமே கிடைக்கின்றன. மாநில அரசின் விதைப் பண்ணைகள் மூலம் பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்யும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தரமான விதைகள், எளிமையாக விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் அரசு வழி வகை செய்ய வேண்டும். வேளாண்மை துறையில் முக்கிய பங்கு வகிப்பது நெல் உற்பத்தி. காவிரி டெல்டா பகுதிகளில் மட்டும் இல்லாது, வைகை, தாமிரபரணி, பாலாறு என அனைத்து பகுதிகளிலும் இருபோக சாகுபடிக்கு ஏற்ற சூழல் உள்ளதால் தேவையான இடுபொருள்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்" என தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த அயிலை சிவசூரியன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், கரும்பு விவசாயத்தின் பரப்பு குறைந்து வருகிறது. இவற்றை அதிகப்படுத்த சிறப்பு திட்டங்கள் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வேண்டும். ஏற்கனவே நிலுவையில் உள்ள கரும்புக்கான பணம் விவசாயிகளுக்கு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்றார்.
தோட்டக்கலை - மலைப்பயிர்கள்
வடமாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவது தோட்டக்கலைப் பயிர்களே. தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மலை மாவட்டங்கள் உள்ளன. இந்த மலை மாவட்டங்களில் தோட்டக்கலை மற்றும் நறுமணப்பயிர்கள் பரப்பை அதிகப்படுத்தவும், விளைப்பொருள்களை நுகர்வோருக்கு எளிதில் எடுத்து செல்லக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யவும் அரசு வழிவகை செய்ய வேண்டும்" என்கிறார் நீலகிரி மாவட்ட தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்த போஜராசன்.
தொடர்ந்து, மலைப்பகுதிகளில் வாழும் தொழிலாளிகளுக்கு ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு மானிய உதவிக்கான நிதியும் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தெரிவித்தார்.
பொதுவான கோரிக்கைகள்
* பயிர் காப்பீடு திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்
* விவசாயம் சார்ந்த பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்
* மரபுசாரா எரிசக்தியில், சூரியசக்தி மின்சாரத்திற்கு முக்கியத்துவம் தர, விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்
* மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்குவது போல, விவசாயிகளுக்கும் டீசல் மானியம் வழங்க வேண்டும்
* விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள இயந்திர வாடகை மையங்கள் குறைந்தபட்சம் ஒன்றியத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில், அப்பகுதிக்கு தேவையான இயந்திரங்களுடன் இருக்க நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்டவை நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: Exclusive: ஏரிகளைச் சீரமைக்கும் பணிகளின் நிலை என்ன?