சென்னை கோடம்பாக்கம் டாக்டர் சுப்புராயன் நகர் ஏழாவது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் படைப்பு என்ற பதிப்பக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கி பணிபுரிந்துவருபவர் விருத்தாசலத்தை சேர்ந்த ரூபன்(50).
கடந்த சனிக்கிழமையன்று ரூபன் பணிக்காக வெளியே சென்றுவிட்டு அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது சானிடைசரை கைகளில் அடிக்கும்போது தவறுதலாக சட்டையிலும் பட்டதாக தெரிகிறது. இதனை பொருட்படுத்தாத ரூபன் உடனே கழிவறைக்கு சென்று லைட்டர் மூலம் சிகரெட்டை பற்றவைத்தபோது திடீரென நெருப்பானது உடலில் பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதனால் அலறிய ரூபனின் கதறல் சத்தம் கேட்டு காவலாளி உடனே வந்து பற்றி எரிந்த தீயை அணைத்தார். ஆனால் அதற்குள் தீ கை, கால், மார்பு போன்ற இடங்களில் பரவி 35 சதவிகித தீக்காயத்தை ஏற்படுத்தியது. இதைடுத்து ரூபனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தீவிபத்து குறித்து அசோக் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.