சென்னை: ஆயிரம் விளக்குப் பகுதி கிரிம்ஸ் சாலையில் மொத்த விற்பனைக் கடைகள், மேன்சன் அடங்கிய வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இந்த வளாகத்தின் முதல் மாடியில் 1000 சதுர அடியில் தனியார் கம்பியூட்டர் நிறுவனம் இயங்கி வருகிறது.
அந்த கம்பியூட்டர் நிறுவனத்தில் கணினி உதிரிபாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றும் பணியில் நேற்று மாலையிலிருந்து பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த கடைக்கு ப்ளோர் மேட் போடுவதற்காக வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் என்கிற சத்யா, கோபிநாத் ஆகிய இருவர் நேற்று இரவு வந்துள்ளனர். டோர் மேட் போடும் பணியில் ஈடுபட்டிருந்த இருவரும் பணி முடிந்தவுடன் அறையிலேயே படுத்து தூங்கியுள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்கு கணினி மற்றும் மின் சாதனங்கள் சேமித்து வைத்திருக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கணினி மின் சாதனப்பொருட்கள், அட்டைகள், பிளாஸ்டிக் பைகள், அதிக அளவில் அறையில் இருந்ததால் தீ மளமளவென முழுவதுமாக பரவியது. மேலும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உருகி கரும்புகை அதிக அளவில் வெளியேறியுள்ளது.
இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருவரும் அறைக்குள் சிக்கியுள்ளனர். அதிகாலை 2 மணிக்கு வணிக வளாகத்தில் இருந்து புகை வந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக தீயணைப்புத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் சரவணன் தலைமையில் வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 4 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து கம்பியூட்டர் நிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்தபோது சதீஷ், கோபிநாத் இருவரும் டோர் மேட் தோலுடன் உருகிய நிலையில் உடல் கருகி இறந்து கிடந்தனர். உடல் முழுவதும் தீக்காயங்கள் இருந்த நிலையில் இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய ஆயிரம் விளக்கு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இருவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருப்பது தெரியவந்தது. தடவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். விபத்து குறித்து ஆயிரம் விளக்குப் போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் ரூ.98.55 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்