புழல் அடுத்த லக்ஷ்மிபுரம் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமாரி. இவர், தனது கணவர் இறந்து விட்டதால், மகன்கள் சந்தோஷ்குமார்(33), ராஜ்(30) ஆகியோர் உடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இவர்கள் வசிக்கும் வீட்டின் மாடியில் உள்ள அறையின் மேற்கூரை, ஓலையால் வேயப்பட்டு இருந்தது. இந்த குடிசை வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர், குமாரியிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து மருமகள்கள் மற்றும் மகன்கள் என குடும்பமே தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். இதற்கிடையில் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு புகார் அளித்தனர். அதனடிப்படையில் தீயணைப்பு அலுவலர் காதர்பாஷா தலைமையில் இரண்டு தீயணைப்பு வண்டிகளில் வந்த 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் வீட்டிலுள்ள தங்கநகை, மின்பொருட்கள், டிவி, குளிர்சாதனப்பெட்டி, குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட வேண்டிய பணம் ஆகியவை எரிந்து போனது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து புழல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.