கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி நாட்டு மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட்டை ஒளிரச் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை ஏற்று நேற்றிரவு சென்னை எண்ணூர் பகுதியில் விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் மூலம் ஒளி ஏற்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது சிலர் வானில் சென்று வெடிக்கும் பட்டாசுகளையும் வெடிக்கச் செய்தனர். இதில் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில் திடீரென ராக்கெட் பட்டாசு ஒன்று கீழே விழுந்து தீப்பற்றியது.
தமிழ்நாடு கனிமவள நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த இடத்தில் காய்ந்து போன செடிகள், மரங்கள் உள்ளிட்டவைகளில் விழுந்த பட்டாசால் அப்பகுதி முழுவதும் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீயினால் ஏற்பட்ட புகை குடியிருப்புப் பகுதி முழுவதுமாகப் பரவியது. இதன் காரணமாக, சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் அலறிக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து எண்ணூர் காவல் நிலைய காவலர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவப் பணியாளர்களுக்கான பிரத்யேக ஆடை தயாரிப்பு!