ராமநாதபுரம் கமுதி பம்மனேந்தல் ஊராட்சியில் பிறந்தவர், அன்புச்செழியன். தலைமை ஆசிரியராகப்பணியாற்றிய நீலமேகத்தின் மகனாக 1964ஆம் ஆண்டு பிறந்தார். 1990-க்கு முன்பே அன்புச்செழியன் குடும்பத்தோடு மதுரை கீரைத்துரை பகுதிக்கு குடிபெயர்ந்தார். தந்தை ஓய்வு பெற்றதும் கிடைத்த பணத்தை வைத்து தெருவோர வியாபாரிகளுக்கும், சிறு சாலையோரக் கடைகளுக்கும் வட்டி விகிதத்தில் கடன் கொடுத்து வாங்கும் பைனான்ஸ் தொழில் செய்யத்தொடங்கினார்.
இதன்பிறகு ராமநாதபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு சிறிய அளவில் பைனான்ஸ்விடும் தொழிலில் ஈடுபட்டார். இதையடுத்து மதுரையில் மார்க்கெட், திரைப்படத்தயாரிப்பாளர்களுக்கு என்று பெரிய அளவில் பைனான்ஸ் செய்யத்தொடங்கினார், அன்புசெழியன். குறிப்பாக, கந்துவட்டியில் ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி என்ற முறையில் முதல்முதலாக பணம் வசூலில் ஈடுபட்டது அன்புச்செழியன் தான் எனக் குற்றச்சாட்டு அவர்மேல் உள்ளது.
இதனையடுத்து தனது தொழிலை விரிவுபடுத்திக்கொண்டு சென்னைக்கு வந்த அன்புச்செழியன் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்ய ஆரம்பித்துள்ளார். தமிழ் சினிமாவில் குறைந்த விழுக்காட்டுக்கு வட்டிக்கு கொடுப்பதால் அன்புச்செழியனை நோக்கி தயாரிப்பாளர்கள் சென்றதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. விஜயகாந்த் நடித்த "வானத்தைப்போல" படத்திற்கு முதன்முதலில் அன்புச்செழியன் பைனான்ஸ் செய்தார். அதன்பின் பல்வேறு படங்களுக்கு கேட்டவுடன் உடனே பணம் வழங்கி அன்புச்செழியனின் தொழில் தமிழ் சினிமாவில் செழிப்பானது.
ஆனால், பணத்தை சொன்ன தேதியில் தராமல் ஏமாற்றினால் அன்புச்செழியன் கையாளும் விதமே வேறு என சினிமா துறையினர் தெரிவிக்கின்றனர். ஆட்களை அனுப்பி மிரட்டுவதும், நிலத்தை அபகரிப்பதும் போன்ற செயலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அக்னி நட்சத்திரம், தளபதி உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஜிவி என்ற ஜி.வெங்கடேஷ்வரன் (திரைப்பட இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரர்) கந்துவட்டி கொடுமையால் கடந்த 2003ஆம் ஆண்டு தற்கொலை செய்தபோது அன்புச்செழியனின் பெயர் அடிபட்டது.
ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே போல "சுந்தரா டிராவல்ஸ்" படத்தை தயாரித்த தங்கராஜா என்பவர் அன்புச்செழியனிடம் 20 லட்சம் ரூபாய் பைனான்ஸ் பெற்று வட்டிக்கொடுக்க முடியாததால் அவரின் 1.5 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்த வழக்கில் 2011ஆம் ஆண்டு அன்புச்செழியன் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கந்து வட்டி, கேட்டு மிரட்டல் என்று வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும் ஒரு செல்வாக்கும் குறையாமல் தனது பைனான்ஸ் தொழிலை திரை உலகில் விரிவுபடுத்தினார், அன்புச்செழியன். இந்த முறை பைனான்ஸ் தொழில் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் களம் இறங்கினார். 'கோபுரம்' பிலிம்ஸ் என்ற பெயரில் விக்ரம் பிரபு நடித்த 'வெள்ளைக்காரத்துரை' என்ற படத்தை கடந்த 2014ஆம் ஆண்டு முதலில் தயாரித்து வெளியிட்டார். இதன்பிறகு 2015ஆம் ஆண்டு தனுஷ் நடித்த தங்கமகன், 2016ஆம் ஆண்டு விஷால் நடித்த மருது, 2017ஆம் ஆண்டு விஜய்சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' ஆகியப் படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.
அதன் பிறகு பெரிதாக அவர் படங்களை தயாரிக்கவில்லை. ஆண்டிற்கு தமிழ் சினிமாவில் 100 படங்கள் வெளியானால் அதில் 90 படங்களில் அன்புச்செழியனின் பங்கு இருக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு திரைப்பட இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் உறவினர் அசோக்கு மார் கந்துவட்டி கொடுமையால் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அசோக் குமாரின் தற்கொலை கடிதம் அதிர்வலையை ஏற்படுத்தியது. பைனான்சியர் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமையால்தான் உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டதாக இயக்குநர் சசிகுமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு காவல் துறை தரப்பில் பெரிய நடவடிக்கை எதுவுமில்லை.
ஆனாலும், இந்த சர்ச்சைக்குப் பிறகும் அன்புச்செழியன் 'பீனிக்ஸ் பறவை' போல மீண்டும் திரை உலகில் பறக்கத் தொடங்கினார். இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு விஜய் நடித்த "பிகில்" படம் தொடர்பாக பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தி ரூ. 77 கோடி ரொக்கம் மற்றும் 300 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.
"பிகில்" திரைப்பட வசூலில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படும் 165 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துவதாக பைனான்சியர் அன்புச்செழியன் ஒப்புதல் அளித்துள்ளார் என வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த சர்ச்சைகளைக் கடந்து தற்போது பெரிய நடிகர்களின் படங்களுக்கு பைனான்ஸ், விநியோக உரிமைகளை கையில் எடுத்து தமிழ்த் திரையுலக தேரின் அச்சாணிகளில் ஒன்றாக மாறி விட்டதாக தமிழ்த்திரை உலகின் முக்கியவர்கள் சொல்லும் வார்த்தையாக இருக்கிறது, அன்புச்செழியனின் பெயர்.
கரோனாவிற்குப்பிறகு மாநிலப்படங்கள் பின்னடைவைச்சந்தித்த போதிலும் தமிழ் சினிமா பெரிய அளவிற்கு எந்த சரிவையும் சந்திக்கவில்லை. இந்த காலகட்டத்தில் பெரிய பட்ஜெட் கொண்ட படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், பைனான்ஸ் செய்த பைனான்சியர்களின் பட்டியலில் அன்புச்செழியன் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் பெயர் இருந்ததாலும், முறையாக வரி செலுத்தாமல் வரிஏய்ப்பு பட்டியலில் வந்ததாலும் வருமானவரித்துறை அலுவலர்கள் கடந்த 2-ம் தேதி முதல் 4 நாட்கள் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.
திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் பிரபல தயாரிப்பாளர்களுக்குச்சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 200 கோடி ரூபாய் வருமானம் மறைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் காட்டப்படாத கடன் தொகை தொடர்பான உறுதிப்பத்திரங்கள் சிக்கியதாகவும், அதன் மூலம் பல்வேறு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் தொடர்பு தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட திரைப்பட தயாரிப்பாளர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் சமர்ப்பிக்கப்பட்ட வருமான கணக்கு வழக்குகளைத்தாண்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளதை உறுதிபடுத்தும் வகையிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கணக்கில் காட்டப்படாத வருமானத்தை, கணக்கில் காட்டப்படாத முதலீடுகளில் ஈடுபடுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து திரைப்பட விநியோகஸ்தர்களுக்குத் தொடர்புடைய வருமான வரித்துறை சோதனையில் திரையரங்குகள் மூலம் வரும் வருமானத்தை மறைத்து கணக்கு காட்டியது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்கள் மூலம் விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒரு சிண்டிகேட்டை உருவாக்கி திரையரங்க வருமானங்களை மறைத்துக்காட்டி உண்மையான வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 4 நாள்கள் நடைபெற்ற இச்சோதனையில் 200 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் மறைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கணக்கில் காட்டப்படாத 26 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வெளியே வரும் அன்புச்செழியன் தற்போது வருமானத்துறையிடம் சிக்கி உள்ளார் என்கின்றனர், திரை உலகினர் சிலர். வருமான வரித்துறையை தொடர்ந்து அமலாக்கத்துறையும் வர வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: சினிமா தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை- ரூ.200 கோடி வரி ஏய்ப்பு