சென்னை: 2021-22 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு முதல் முறையாக தமிழ்நாடு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொழில் துறையினர் சுமார் 40 பேருடன் பட்ஜெட் குறித்த கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற கலந்துரையாடினார். கூட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
இந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக முக்கிய நிர்வாகி கே.டி.ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொழில் துறையில் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு ஶ்ரீநிவாசன், டிவிஎஸ் குழும இணை இயக்குநர் தினேஷ், அப்பல்லோ மருத்துவமனை குழும இணை இயக்குநர் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு தலைவர் சங்கீதா ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட இந்தியா சிமென்ட்ஸின் முன்னணி தொழிலதிபரும் துணைத் தலைவரும் எம்.டி.யுமான திரு. என். சீனிவாசன் கூறியபோது, "பல்வேறு தொழில்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் கேட்பதில் நிதி அமைச்சர் மிகவும் பொறுமையாக இருந்தார். 2021-22ஆம் ஆண்டிற்கான நிலுவையில் உள்ள பட்ஜெட்டை வழங்கிய நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தேன். பட்ஜெட் வளர்ச்சியைத் தூண்டும். இந்த காலண்டர் ஆண்டில் (2021), உற்பத்தித் தொழில்கள் உட்பட அனைத்து தொழில்களும் முழுத் திறனை நோக்கி இயங்கும் என்று நான் அவர்களிடம் சொன்னேன்.
மேலும், உற்பத்தித் தொழில்களுக்கு ஒரு வளர்ச்சி நிதி நிறுவனம் தேவை என்று அமைச்சரிடம் முன்பே கூறியிருந்தேன். இது 2021-22க்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது, இது மிகவும் நல்லது" என்றார்.