சென்னை: மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது . இந்தக் குழுவினருடன், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று(ஜூன் 15) காலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார் . அதனைத் தொடர்ந்து மாநிலக்கல்விக்குழுவின் கூட்டம் அதன் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முதலமைச்சரின் செயலர் உதயச்சந்திரன், உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார், தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் தலைவர் முருகேசன், 'மாநில கல்விக்கொள்கை குறித்த குழுவின் கூட்டம் முதற்கட்டமாக நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அரசு நிர்ணயித்த காலக்கெடுவிற்குள் மாநில கல்விக்கொள்கை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய முயற்சிப்போம்’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்து அதில் நல்ல அம்சங்கள் இருந்தால் பரிசீலிப்போம். அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு ஏற்க முடியாத அம்சங்கள் இருந்தால் அதனை ஏற்க மாட்டோம்' என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "விஜய் ஒரு குழந்தை அவருக்கு ஒன்றும் தெரியாது" - சொல்கிறார் பாஜகவின் கருநாகராஜன்