16ஆவது சட்டப்பேரவைக் கூட்டத்தின் மூன்றாவது நாள் நிகழ்வில் மாநகராட்சி, நகராட்சி திருத்த சட்டமுன் வடிவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தாக்கல் செய்தார். ஊராட்சிகள் திருத்த சட்டமுன்வடிவை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தினார்.
உள்ளாட்சித்தேர்தலும் தனி அலுவலர்களின் பதவிக்காலமும்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் தயார் ஆனது.
கரோனா திடீர் பரவல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை தணிப்பதற்கு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மறு சீரமைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தேர்தல் பணிகளைத் திட்டமிட்டப்படி நிறைவு செய்யமுடியவில்லை என அறியப்படுகிறது.
ஆகையால், தேர்தல் நடத்த மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், தற்போது பணியில் உள்ள தனி அலுவலர்களின் பதவிக் காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இருந்தால், அந்த தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான சட்டமுன்வடிவு இன்று (ஜூன் 23) சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாளை இந்த சட்டமுன்வடிவு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் சட்டமசோதா தாக்கல் ஆகிறது!