சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மாநகராட்சி அலுவலர்களுடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உள்ளாட்சித் துறை சென்னை பெருநகர மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சியில் போர்க்கால அடிப்படையில் ஊழியர்கள் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்ற கட்டுப்பாட்டு அறையில் மாநகராட்சி, நகராட்சி போன்ற பகுதிகள் எல்லாம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மாநகரம் முழுவதிலும் உள்ள அனைத்து வீடுகளிலும், தினந்தோறும் ஆய்வு செய்து அதன் மூலம் காய்ச்சல் இருமல் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை உடனடியாக பரிசோதனை செய்து, மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளோம்.
16 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் 75 முதல் 100 வீடுகள் வரை நாளை முதல் தொடர்ந்து 90 நாட்கள் ஆய்வு செய்து அதன் பதிவுகளை உரிய முறையில் மேற்கொள்வார்கள். இதன் மூலம் பொதுமக்களின் ஆரோக்கியத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
இந்தக் களப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உரிய பயிற்சியும், பாதுகாப்பும் மற்றும் மாதம் 15 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் மூன்று வேளையும் அம்மா உணவகத்தில் உணவு வழங்க உத்தரவிட்டுள்ளார். மொத்தம் 658 அம்மா உணவகங்களில் தங்கு தடையின்றி உணவுகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
சுமார் 6 லட்சம் பேர் அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு வருகின்றனர். அனைத்து மக்களும் அரசு கூறும் அறிவுரைகளைக் கடைப்பிடித்து முழுமையாக ஒத்துழைத்தால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும். அனைத்து தர மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொடுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் -பொதுமக்கள் பாராட்டு!