சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 8.5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு பெண் மதபோதகர் மரியசெல்வம் மோசடி செய்துவிட்டதாக பேராயர் காட்பிரே நோபிள் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் பெண் மத போதகரான மரியசெல்வம் மீது மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் பேராயர் காட்பிரே நோபிள் பாலியல் தொல்லை கொடுத்ததை மறைப்பதற்காக தன் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாக மத போதகர் மரியசெல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (மே 21) புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 2020ஆம் ஆண்டு பேராயர் காட்பிரே நோபிளுடன் பழக்கம் ஏற்பட்டது. மோசடி புகாரில் சிக்கிய காட்பிரே நோபிளை வழக்கிலிருந்து விடுவிக்க தன்னை அணுகினார். காட்பிரேவின் மகனும், தானும் ஒரே ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருவதால், அது சம்பந்தமாக தன்னிடம் 4.5 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
தேவைப்படும் போது பணத்தை எடுத்துக்கொள்ள மூன்று காசோலைகளை நான் கொடுத்தேன். பின்னர் கொடுத்த காசோலைகள் தொலைந்துவிட்டதாக கூறி காட்பிரே நோபிள் தன்னிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் காட்பிரே பணம் சம்பந்தமாக தன்னிடம் பேச வேண்டும் எனக்கூறி செல்போனில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
அதற்கு நான் இணங்காததால் காட்பிரே தன்னை ஆதாரம் இல்லாமல் ஆக்கிவிடுவேன் எனவும் பொய் புகார் அளித்து சிறைக்கு தள்ளிவிடுவேன் என மிரட்டி வந்தார். மேலும், மானத்திற்கு பயந்து பேராயர் காட்பிரே மீது புகார் அளிக்காமல் இருந்தேன். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காட்பிரே என் மீது பொய் புகார் கொடுத்து பின்புலத்தை பயன்படுத்தி வழக்குப்பதிவு செய்ய வைத்தார்.
என் மீது கொடுத்திருப்பது பொய் புகார் என காவல் துறையினரிடம் அனைத்து ஆதாரங்களையும் சமர்பித்துள்ளேன். நான் நிரபராதி. ஏற்கனவே காட்பிரே நோபிள் மீது பல மோசடி புகார்கள் நிலுவையில் இருக்கிறது. நான் கொலை மிரட்டல் விடுத்ததாக கொடுத்த ஆடியோ எடிட் செய்து வெளியிட்டப்பட்டுள்ளது. என் மீது பொய் புகார் அளித்த காட்பிரே நோபிள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளியிடம் நகைகளை பறித்த பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை!