சென்னை: சென்னையில் மென்பொருள் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் சிறுசேரியை அடுத்த பொன்மாரில் டிசம்பர் 23ம் தேதி சனிக்கிழமை மாலையில் பெண் ஒருவரின் கூக்குரல் கேட்டுள்ளது. பெண் ஒருவர் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் தீயில் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு பதறிப்போயினர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் சேர்ந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தாழம்பூர் காவல்துறையினர் அளித்துள்ள தகவலின் பேரில், எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனை வரும் போதே உயிரிழந்து விட்டார் எனவும், அந்த பெண் மதுரையைச் சேர்ந்த நந்தினி (27) எனவும் கூறினர். பெண்ணுடன் மருத்துவமனைக்கு வந்த வெற்றி மாறன் (27) என்ற நபரின் மீது சந்தேகம் எழுந்ததால் போலீசார் அவரை விசாரித்துள்ளனர். முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த வெற்றி மாறன், பின்னர் ஒவ்வொரு உண்மையாக சொல்லத் தொடங்கியுள்ளார்.
வெற்றி மாறன் முதலில் பெண்ணாக நந்தினியுடன் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளார். பருவமெய்தியதும் தனது பாலின வித்தியாசத்தை உணர்ந்த அந்த பெண் பின்னர் ஆணாக மாறி தனது பெயரை வெற்றி மாறன் என மாற்றிக் கொண்டுள்ளார். இதனை ஏற்காத அவரது குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
சொந்த குடும்பத்தினரே துரத்திய போதும், வெற்றி மாறனின் நட்பை நந்தினி துண்டிக்கவில்லை. நந்தினியின் பெற்றோரும், குடும்பத்தினரும் வெற்றிமாறனை தங்கள் பிள்ளை போல அன்பு செலுத்தியுள்ளனர். நந்தினியின் மரணம் குறித்து சென்னை போலீசார் அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுத்த போதும் கூட, நந்தினியின் அக்கா சென்னையில் தொடர்பு கொண்ட முதல் நபர் வெற்றி மாறன் தான் என போலீசார் கூறுகின்றனர்.
நந்தினியின் கள்ளங்கபடமற்ற அன்பை புரிந்து கொள்ளாத வெற்றி மாறன், அவர் தன்னை காதலிப்பதாக எண்ணிக் கொண்டுள்ளார். ஒருதலையாக காதலை வளர்த்ததோடு நந்தினி வேறு எந்த ஆணுடனும் பேசக்கூடாது என கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நந்தினி வெற்றி மாறனுடனான நட்பை துண்டித்துக் கொள்ளத் துவங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் (டிச.23) நந்தினியின் பிறந்தநாள் என்பதால், பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருவதாகக் கூட்டிச்சென்று பகல் முழுவதும் கோயில், அனாதை விடுதி என சுற்றி திரிந்து, இரவில் ஆள்அரவமற்ற இடத்தில் பிறந்த நாள் சர்ப்ரைஸ் பரிசு தருவதாகக் கூறி நந்தினியை கூட்டிச் சென்றுள்ளார்.
அங்கே கண்களை முதலில் கட்டிவிட்டு, பின்னர் கை, கால்களை சங்கிலியால் பிணைத்துள்ளார். நந்தினியின் கைகளை கத்தியால் அறுத்துவிட்டு, பின்னர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அதற்குள் பொதுமக்கள் கூடி விட்ட நிலையில், அவர்களுடன் சேர்ந்து நந்தினியை காப்பாற்றுவது போல நடித்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நந்தினியின் கொலையை முன்கூட்டியே திட்டமிட்டிருந்த வெற்றி மாறன், தனது பையில் சங்கிலி, கத்தி, பாட்டிலில் பெட்ரோல் உள்ளிட்டவற்றை வாங்கி வைத்திருந்ததாக போலீசார் கூறியுள்ளனர். நந்தினியின் பெற்றோர் சென்னை வந்துள்ள நிலையில், தங்கள் மகளுக்கு நேர்ந்த மரணத்தை கேள்விப்பட்டு கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது.
இதையும் படிங்க: சென்னையில் ஐடி பெண் ஊழியர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!