தமிழ்நாடு காவல் துறை சிறப்பு டிஜிபி ஒருவர், பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டிஜிபி திரிபாதி, உள்துறைச் செயலாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அலுவலரின் புகாரை அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி காவல் துறையினருக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறப்பு டிஜிபி மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னரே, அவரை கட்டாய காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் பெண் ஐபிஎஸ் அலுவலர்கள் சுமார் 6க்கும் மேற்பட்டோர், டிஜிபி திரிபாதியை சந்தித்து, பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வாய் மொழியாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு தொடர் மிரட்டல் வருவதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரியதாகவும் தெரிகிறது.
அதேபோல் காவல் துறையில் பெண் காவலருக்கு நடைபெறக்கூடிய பாலியல் தொந்தரவுக்கு முடிவு கட்ட வழிவகை செய்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: புகார் அளிக்காமலிருக்க பெண் எஸ்பியின் காலில் விழுவதாக கூறிய டிஜிபி