சென்னை: இந்திய திரைப்பட கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பில் ஒரு படத்தை தேர்வு செய்து அனுப்பும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு இந்தியா சார்பில் '2018' என்ற மலையாள படத்தை பரிந்துரை செய்துள்ளது. இதன் அறிவிப்பு இன்று (செப்.24) காலை சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து 16 தேர்வுக் குழு உறுப்பினர்கள் சேர்ந்து இதனை தேர்வு செய்துள்ளனர். முன்னதாக தமிழ் திரைப்படங்களில் இருந்து விடுதலை முதல் பாகம், வாத்தி, மாமன்னன், 1947 உள்ளிட்ட படங்கள் பட்டியலில் இடம்பெற்று இருந்தன. இதனை தொடர்ந்து நடிகரும், இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தேர்வுக்குழு உறுப்பினருமான ஃபெப்சி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "மாமன்னன் படத்தில் எமோஷனல் இருந்தது, ஆனால் நாங்கள் என்ன பேசினோம் என்பதை இங்கு சொல்ல முடியாது. எங்களுக்கும் ஒரு வரையறை உண்டு. எமோஷனல் எந்த படத்தில் அதிகம் உள்ளது. உண்மை மட்டுமே ஆஸ்கருக்கு போகும். அதற்காக மற்ற படங்களை குறை சொல்லவில்லை. நார்மல் தியரியை பிரேக் செய்யும் விஷயத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். '2018' படத்தில் வில்லன் என்று சொன்னால் அது எமோஷனல் தான்" என்று பேசினார்.
பின்னர், தமிழ் படங்கள் குறைந்த அளவே தேர்வு செய்யப்படுவதை பற்றி கேட்டகப்பட்ட கேள்விக்கு, "கடந்த முறை விசாரணை தேர்வு செய்யப்பட்டதே. ஆனாலும் பணம் செலவுசெய்ய வேண்டும். அதிக பணம் செலவு செய்தால்தான் ஆஸ்கர் மேசையை தொட முடியும். தற்போது தான் அரசு ஒரு கோடி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. எத்தனை படங்கள் வந்தாலும் எமோஷனல் இல்லை என்றால் எதுவும் நடக்காது.
மழை காலத்தில், இந்த வெள்ளத்தை நாம் எல்லோரும் அனுபவித்தவர்கள் தான். நானும் அனுபவித்து உள்ளேன். சாலை முழுவதும் சடலங்கள் தான் இருந்தது. உண்மையான எமோஷனல், இந்த படத்தில் இருந்ததால்தான் இப்படத்தை தேர்வு செய்தோம்" என்று தெரிவித்தார்.
பின்னர் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டது குறிட்த்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஃபெப்சி விஜயன், "நடிகர் விஜய் அரசியல்வாதி கிடையாது, அப்புறம் ஏன் அரசியல்வாதிகள் குறுக்கீடு செய்யப் போகிறார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக திகழும் டொவினோ தாமஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த '2018' படம் ஆஸ்கார் விருதிற்கான பரிந்துரை பட்டியலில் தேர்வு செய்யப்பட்டதற்கு, ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர். இருந்த போதிலும் தமிழில் வெளியான படங்கள் எதும் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்தாக கூறப்படுகின்றன.