சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சின்னத்திரை மற்றும் ஃபெப்சி நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது சின்னத் திரைக்கு படப்பிடிப்பு தொடங்க அனுமதி வழங்கியதற்கும், திரைப்பட போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் செய்ய அனுமதி வழங்கியதற்கும் நன்றி தெரிவித்தனர். ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, நடிகை குஷ்பு, நடிகர் மனோபாலா, இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே. செல்வமணி, வெளி மாநிலத்தில் இருந்து வரும் நடிகர்கள் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தக்கூடாது என கோரிக்கை விடுத்தோம். அதற்கு அவர்கள் பரிசோதனை செய்து நெகடிவ் என ரிசல்ட் காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். சின்னத்திரை படப்பிடிப்புக்கு 50 விழுக்காடு ஊழியர்களை அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 60 பேர் இல்லாமல் படப்பிடிப்பை தொடங்க முடியாது.
பணியிடங்களில் தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி தகுந்த இடைவெளி பின்பற்றி பணிகள் செய்தல், அடிக்கடி பணியிடங்களை சுத்தம் செய்தல் போன்றவற்றை கடைபிடித்து பணிகள் செய்யப்படும். முதலமைச்சர் எங்கள் கோரிக்கையை ஏற்பார்" என்று தெரிவித்தார்.
இவரைத் தொடர்ந்து குஷ்பு பேசுகையில், தற்போது வரை எந்த சின்னத்திரை படப்பிடிப்புகளும் ஆரம்பம் ஆகவில்லை. படப்பிடிப்பு நடத்துவதற்கான கூடுதல் ஆட்கள் போன்ற அனைத்து பிரச்னைகளையும் சரி செய்த பின் தான் படப்பிடிபை தொடங்குவோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் உறுதியளித்திருக்கிறார் - ஆர்.கே. செல்வமணி