கரோனா தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு திருமழிசையில் காய்கறி சந்தையும், பழ சந்தை மாதவரம் பேருந்து நிலையத்திலும் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் வானகரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பூ மார்க்கெட் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
இப்போது இந்தக் கடைகளுக்கு சி.எம்.டி.ஏ மூலம் வாடகை வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (செப்.02) திடீரென பூக்கள் வாங்க வரும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பூக்கள் எடுத்துவரப்படும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களுக்கு ரூ.10 முதல் ரூ. 300 வரை கட்டணமும், கடைகளுக்கு கூடுதலாக கட்டணமாக உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதிமுகவினரின் செயலை கண்டிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பூ மார்க்கெட் வியாபாரிகள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூக்களைக் கொட்டி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:முன்னாள் கஞ்சா வியாபாரிக்கு போலீஸ் தொல்லை: மனைவி புகார்!