தமிழ்நாட்டில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த 54 வயதுமிக்க நபர் உயிரிழந்துள்ளார். இதனால், தமிழ்நாட்டில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. எனவே, வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருவோரை தனிமைப்படுத்தி வீட்டுக்காவலில் வைக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்திவருகிறது.
இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து டாபெப் நூர் முகமது (27), இவரது தந்தை சகுபார் சாதிக் (62) ஆகியோர் விமானம் மூலம் சென்னை கோயம்பேட்டில் உள்ள இவர்களது வீட்டிற்கு வந்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இவர்கள் இருவரையும் பரிசோதித்த அலுவலர்கள் கரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களை வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், இவர்கள் இருவரும் சுகாதாரத் துறை அலுவலர்களின் அறிவுரையை மதிக்காமல் தங்களது சொந்த ஊருக்குப் பேருந்தில் பயணம்செய்துள்ளனர். இதனைக் கண்டறிந்த கோயம்பேடு காவல் துறையினர் அவர்கள் மீதும் ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதபோன்று கடந்த 24ஆம் தேதி சீனாவிலிருந்து சென்னை வந்த அண்ணா நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் அருண். இவரை மருத்துவக் குழுவினர் வீட்டுக் கண்காணிப்பில்வைத்து பார்த்துவந்துள்ளனர்.
ஆனால், வீட்டில் இல்லாமல் இவர் அரசு உத்தரவை மீறி வெளியே சுற்றிவந்தது காவல் துறைக்குத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இவர் மீது திருமங்கலம் காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியலாம்