சென்னை: ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் சைத்தானியா(37) - வைதேகி(33) தம்பதியினர். இவர்களுக்கு பத்ரி(8) மற்றும் கௌசிக்(4) என 2 மகன்கள் உள்ளனர். சைத்தானியா கிழக்கு தாம்பரத்தில் உள்ள விமானப்படையில் சமையல் வேலை பார்த்து வந்தார்.
மேலும் மாடம்பாக்கம் பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் சைத்தானியா, சுமார் ஐம்பது லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படும் நிலையில் அவர் சில நாட்களாக இந்த கடன் தொல்லையில் இருந்து மீள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக தெரியவருகிறது. இதனால், மருத்துவ விடுப்பு எடுத்து ஒரு வருடம் தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்ற சைத்தானியா சிறிய அளவில் கடனை அடைத்தப் பின்பு, மீண்டும் கடந்த 20ஆம் தேதி தனது குடும்பத்துடன் மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடன் தொல்லையால் மனஉளைச்சலில் இருந்த சைத்தானியா நேற்று அதிகாலை தனது மகன் பத்ரியை கொலை செய்துள்ளார். பின்னர், தானும் தற்கொலை செய்வதற்காக சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். அதற்கு முன்னதாக, தனது வாட்ஸ்அப் குழுவில் தனது மூத்த மகனை தானே கொன்றுவிட்டதாகவும், தானும் தற்கொலை செய்யப்போவதால் எனது மனைவி மற்றும் இளைய மகனைப் பார்த்துக் கொள்ளும்படியும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்தபோது, சைத்தானியா மூத்தமகன் பிணமாக கிடந்துள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பின்னர் சைத்தானியாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது, மெரினா கடற்கரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனையடுத்து சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சைத்தானியாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், கடன் தொல்லை அதிகமானதால் வேறு வழியின்றி தனது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள கடற்கரைக்குச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருவாரூரில் சுவர் இடிந்து விழுந்து 9 வயது சிறுமி உயிரிழந்த சோகம்