சென்னை: சென்னை மந்தைவெளியில் வசித்து வந்தவர், பாலமுரளி (43). இவர், ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சந்திரலட்சுமி. இவர்களுக்கு செளமியா(13), சாய் சுவேதா (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். இதில் செளமியா 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், கோடை விடுமுறை என்பதால் பாலமுரளி, தனது குடும்பத்தினருடன் ஏற்காடுக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஏற்காட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கிய அவர், குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். நேற்று(மே.1) மதியம் ஏற்காட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார்.
அங்கு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பாலமுரளி உற்சாகமாக குளித்துள்ளார். அப்போது, அங்குள்ள பாறையில் ஏறி விளையாடிய செளமியா, நீர்வீழ்ச்சியின் அருகில் 30 அடி உயரப் பாறையில் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளில் ஏறியுள்ளார். அதைப் பார்த்த பாலமுரளி, அங்கு செல்லாதே என்று எச்சரித்தபடி, அவரும் பாறையில் ஏறினார்.
பாறையின் உச்சிக்குச் சென்ற சிறுமி எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். மகள் கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுரளி, அவளைக் காப்பாற்றச் சென்றார். அவரும் பாறையில் இருந்து கீழே விழுந்தார். இருவரும் உருண்டபடி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழும் பகுதியில் விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கணவர் மற்றும் மகளின் உடலைப் பார்த்து சந்திரலட்சுமி கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.
இது குறித்து தகவல் அறிந்த ஏற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு முடிந்த பிறகு, இன்று மாலை இருவரது உடலும் சென்னை கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.