சென்னை: அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த விஸ்வபாண்டியன் என்பவருக்கும், அண்ணாநகர் அன்பு காலனியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு இந்த சிறுவன் 4 வயது குழந்தையாக இருந்த போது தந்தை விஸ்வபாண்டியன், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து தவறாக நடந்துள்ளார்.
போக்சோ சட்டத்தில் கைது
இதுகுறித்து, சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் காவல் துறையினர், விஸ்வபாண்டியனை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சிறைத் தண்டனை
இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சமி, விஸ்வபாண்டியன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புதிதாக 320 பேருக்கு கரோனா பாதிப்பு