சென்னை: தேசிய ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனத்தின் மூத்த உதவி இயக்குநர் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ், பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி, வளாக இயக்குநர் அனிதா மாபெல் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில், 2013ஆம் ஆண்டு முதல் நிர்வாகம் மற்றும் கொள்முதல் பிரிவில் மூத்த உதவி இயக்குநராகப் பணியாற்றிய 'இளஞ்செழியன்' என்பவர், கட்டடப்பிரிவு உதவி இயக்குநராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
சாதி அடிப்படையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகவும், பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் தரமணி காவல் நிலையத்தில் இளஞ்செழியன் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் சென்னை நிஃப்ட் வளாக இயக்குநர் அனிதா மாபெல் மனோகர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அனிதா மாபெல் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், டெல்லி தலைமையகத்தின் கண்காணிப்புப் பிரிவு கடிதத்தின் அடிப்படையில், தலைமை அலுவலகத்தின் ஒப்புதலின் அடிப்படையில் தான், இளஞ்செழியன் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அதில் எந்த உள்நோக்கமும் கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நிறுவனத்தின் நலன் கருதி எடுக்கப்படும் நிர்வாக முடிவுகள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ், குற்றமாகாது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபட்டவர் கைது!