சென்னை: தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.27) பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, மகளிர் உரிமைத் தொகையை அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் எனவும், மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், தொழில்துறையில் இரண்டு, மூன்று ஆண்டுகளில் கடும் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில்பலாஜி, "அதிமுக ஆட்சியின்போது 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடனில் விட்டுச் சென்றீர்கள். 2 ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தவில்லை. மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் மத்திய அரசும் கட்டாயப்படுத்தியதால் உயர்த்தப்பட்டது. மானியத்தை நிறுத்துவோம் என மத்திய அரசு எச்சரித்ததால் மின் கட்டணத்தை உயர்த்தினோம். தற்போது 2 கோடிக்கும் மேற்பட்ட இணைப்புகளில் 1 கோடி பேருக்கு எந்தவித மின்கட்டணமும் விதிக்கப்படவில்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய தங்கமணி, "எங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியது, ஆனால், எங்களது முதலமைச்சர் மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தார்" எனத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தற்போது 18,053 மெகாவாட் அளவுக்கு மின் தேவை உயர்ந்திருக்கிறது. தொழிற்சாலைகளுக்கான தேவை 35 ஆயிரத்து 615 மில்லியன் யூனிட்டாக அதிகரித்திருக்கிறது. 18 மணி நேரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
அதிமுக ஆட்சியில் தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்னதாக 25ஆம் தேதி 24 மணி நேரம் விவசாயிகளுக்கு இலவச மினசாரம் வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டீர்கள். மறுநாள் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது" என்றார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்வெட்டு வரும் என்பது மக்களுக்குத் தெரியும்" என்றார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
டாஸ்மாக் தொடர்பாக பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "விற்பனை விலையைவிட கூடுதலாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 1,952 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்போது தொழிற்சங்கத்தினர் குறுக்கிடுகிறார்கள். விற்பனையாளர், மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.