தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளதால், நடிகர் ரஜினிகாந்த் வருகின்ற டிசம்பர் மாதம் அரசியல் களம் காணுவார் என அவருக்கு நெருக்கமான தலைவர்கள் தெரிவித்து வந்தனர். இதனிடையே ரஜினிகாந்த் வெளியிட்டது போன்ற அறிக்கை சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.
இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து ரஜினிகாந்த் விளக்கமான அறிக்கையை நேற்று (அக். 29) வெளியிட்டார். அதில், 'என் அறிக்கை போன்று ஒரு கடிதம் சமூகவலைதளத்தில் வெளியானது. அது என்னுடைய அறிக்கை அல்ல, அதில் வந்திருக்கும் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் உண்மை. எனது அரசியல் நிலைப்பாட்டை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன்' என்று தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார் என்று ஒரு தரப்பும், அவர் தகுந்த நேரத்தில் நிச்சயம் வருவார் என்று மற்றொரு தரப்பிலும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்விட்டரில், "#ஓட்டுனுபோட்டாரஜினிக்குதான் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். மேலும், சென்னையின் முக்கியமான இடங்களில் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் விதமாக அவரது ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
இன்று (அக்.30) காலை ரஜினிகாந்த் ரசிகர்கள் 10க்கும் மேற்பட்டோர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லம் முன்பு ஒரே வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டை அணிந்திருந்தனர். அதில், "ஆட்சி மாற்றம் இப்போது இல்லைனா எப்போதும் இல்லை.... தலைவரும் முதல்வரும் நீயே" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் எழும்பூர் ரஜினி ரசிகர் மன்ற மகளிர் அணிச் செயலாளர் ஆட்டோ ஆண்டாள் கூறுகையில், "தலைவர் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார். அவர் வந்தால் தான் தமிழ்நாட்டை மீட்க முடியும். ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வைப்பதற்கு ரஜினி ரசிகர் மன்ற மகளிர் அணி சார்பாக மாநிலம் முழுதும் உண்ணாவிரதம் இருப்போம்" என்றார்.
இதையும் படிங்க: "வேறுவழியின்றி ஒப்புதல் அளித்ததற்கு நன்றி, என்றும் வெல்லும் சமூகநீதி" - ஸ்டாலின்