சென்னை: தொழில் செய்வதா அல்லது மனை வாங்குவதா என கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் பிரபல சீரியல் இயக்குநரின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் நாகரத்தினம் (47). சீரியல் இயக்குநரான நாகரத்தினம் அழகு, வாணி ராணி, பிரியமான தோழி, பாண்டவர் இல்லம் உள்ளிட்ட பல சீரியல்களில் இயக்குநராக பணியாற்றி உள்ளார். சின்னதிரையில் ஓ.என் ரத்தினம் என்று அழைக்கப்படும் நாகரத்தினத்திற்குப் பத்மாவதி (37) என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.
கடந்த இரண்டாம் தேதி நாகரத்தினம் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான கோயம்புத்தூருக்குச் சென்றுவிட்டு, பிள்ளைகளை அங்கேயே விட்டு மனைவியுடன் 15ஆம் தேதி சென்னை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பத்மாவதி வீட்டிலிருந்த நகைகளை அடமானம் வைத்து தொழிலில் முதலீடு செய்யலாம் எனக் கூறியதாகவும், அதற்கு நாகரத்தினம் மறுப்பு தெரிவித்து நகைகளை விற்பனை செய்துவிட்டு சொந்த ஊரில் நிலம் வாங்கலாம் என கூறியதாகத் தெரிகிறது.
இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முந்தினம் கெருகம்பாக்கத்தில் ஷூட்டிங்கிற்கு சென்ற நாகரத்தினம் நேற்று வீட்டிற்கு வந்த போது மீண்டும் இருவருக்குள்ளும் அதே பிரச்னை எழுந்துள்ளது.
பின்னர் நாகரத்தினம் தனது குழந்தைகளை அழைப்பதற்காக வடபழனிக்குச் சென்று வீட்டிற்குத் திரும்பிய போது, அறையில் மனைவி பத்மாவதி தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். உடனடியாக மனைவி பத்மாவதியை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார்.
அங்கு பத்மாவதியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக இயக்குநர் நாகரத்தினம் அளித்த தகவலின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தொழில் துவங்குவதா அல்லது மனை வாங்குவதா என்று எழுந்த பிரச்னையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பத்மாவதியின் தற்கொலைக்கு குடும்ப பிரச்னை தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.