சென்னை, ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாகூர் மீரான். இவர் தென் சென்னை பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர். சரித்திரப் பதிவேடு குற்றவாளி.
நாகூர் மீரான் மீது பல காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் உள்ள தோழி வீட்டுக்கு நாகூர் மீரான் முன்னதாக சென்றபோது எட்டு நபர்களுக்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக நாகூர் மீரானை வெட்டி விட்டுத் தப்பிச் சென்றது.
இதில் தலை, முகம், கை, கால் ஆகிய பகுதியில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த நாகூர் மீரான், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, அவரை வெட்டிய எட்டு நபர்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் தூறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து குற்றவாளிகளைப் பிடிக்க முற்பட்டனர்.
இதில், காவலர்களைக் கண்டதும் அங்கிருந்த சுவரைத் தாண்டி குதித்து தப்பிக்க முயற்சித்த முக்கிய குற்றவாளி ராபின், அவரது நண்பர் ஆகியோருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அனைவரையும் காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்.
மேலும் காயம் அடைந்த இருவருக்கும் மாவுக்கட்டுகள் கட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு எட்டு நபர்களையும், சம்பவம் நடந்தபோது உடனிருந்த பெண்ணையும் சேர்த்து 9 நபர்களையும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து ராபின், பிரபாகரன், விமல்ராஜ், இருளா கார்த்திக், காணிக்கைராஜ், பால்ராஜ், சாமுவேல், சீனிவாசன்,யோகலட்சமி ஆகிய ஒன்பது நபர்களையும் காவலர்கள் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'பொய்யான வாக்குறுதி அளித்து உடலுறவு... பாலியல் வன்புணர்வாக எடுத்துக்கொள்ள தேவையில்லை'