சென்னை: தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது மற்றும் பல்வேறு விருதுகளை பெற்ற பிரபல ஓவியர் மாருதி (86) காலமானார். ஓவியர் மாருதியின் இயற்பெயர் ரங்கநாதன் ஆகும். ஓவியர் மாருதி புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28ஆம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர்.
மாருதி தனது பி.யூ.சி படிப்பை புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார். மேலும் மாருதி இளம் வயதிலேயே ஓவியங்கள் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் தனது படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டார். மேலும் தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர்.
மராட்டிய சமூக குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ரங்கநாதன் புதுக்கோட்டையில் எஸ்.எஸ்.எல்.சி 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரது தந்தை ஆசிரியராக இருந்ததால், வீட்டில் கிடைக்கும் சாக்பீஸைக் கொண்டு ரங்கநாதன் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டார். ஓவியர் மாருதி எனும் ரங்கநாதன், கண்மணி, பொன்மணி, விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார்.
இவரது ஓவிய கலையைப் பாராட்டி தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்துள்ளது. மேலும் மாருதி கதை கவிதைகளுக்கு ஏற்ப ஓவியங்களும் வரைந்துள்ளார். மாருதியின் தூரிகையில் இருந்து வெளிப்பட்ட மாந்தர்களின் அழகும், நளினமும் அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.
'உளியின் ஓசை', 'பெண் சிங்கம்' உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் மாருதி பணியாற்றியுள்ளார். மேலும் ஓவியர் மாருதி 1969ஆம் ஆண்டு திரைப்பட பேனர்களுக்கு வரையும் ஆசையில் சென்னைக்கு வந்தார். முதன்முதலில் மைலாப்பூரில் திரைப்படங்களுக்குப் பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம், பெயர் எழுதும் பணியில் சேர்ந்து பல திரைப்பட பேனர்கள் மற்றும் பத்திரிகைகளில் ஓவியம் வரைந்துள்ளார்.
இதய கோளாறால் பாதிக்கப்பட்டு வந்த மாருதி இன்று மகாராஷ்டிரா மாநிலம், பூனே நகரில் தனது மகள் சுபாஷினி வீட்டில் தங்கியிருந்தார். மீண்டும் சென்னை திரும்பிய நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 27) காலமானார். இவருடைய மனைவி விமலா கரோனா காலத்தில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாருதியின் மறைவிற்கு திரையுலகினர், பத்திரிகைத் துறையினர் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வடிவேலு வித்தியாசமான நடிப்பில் அசத்திய 'மாமன்னன்' ஓடிடியில் இன்று ரிலீஸ்!