சென்னை கோயம்பேட்டில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையை நடத்தி வந்த சித்த மருத்துவர் தணிகாச்சலம் என்பவர், கரோனா வைரஸ் தொற்றுக்கு தான் மருந்து கண்டுபிடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்றை பதிவிட்டார். அதனால் தமிழ்நாடு சுகாதாரத்துறை இயக்குநர், தணிக்காசலம் பொய்யான தகவலைப் பரப்பிவருவதால் அவரைக் கைது செய்யும்படி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் கடந்த 4ஆம் தேதி புகார் அளித்தார்.
அந்தப்புகாரின் அடிப்படையில் அவர் கடந்த 6ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவரை சைபர் கிரைம் காவல்துறையினர் 4 நாட்கள் காவலில் எடுத்து முதல்கட்டமாக மருத்துவ போலி சான்றிதழ், கல்வி தகுதி குறித்து விசாரணை நடத்தினர்.
அதையடுத்து அவரிடம் கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் குறிப்பாக எவ்வாறு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது? அந்த மருந்தை கரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு கொடுக்கப்பட்டதா? அதன்பின் அவர் குணமடைந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மேலும் நாளை முதல் விசாரணை முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மு.க.அழகிரி பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் குறித்த புகார்.