சென்னை : பாண்டி பஜார் வடக்கு உஸ்மான் சாலையில் பிரபல நகைக்கடை (கல்யாண் ஜுவல்லர்ஸ்) இயங்கி வருகிறது. இதன் கிளை நிறுவனங்களுள் ஒன்று குரோம்பேட்டையில் இயங்கி வருகிறது.
இந்த நகைக்கடை வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர தவணை முறையில் சீட்டு கட்டி நகை வாங்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் தவணை முறையில் 11 மாதங்களுக்குச் செலுத்தும் பணத்திற்கு ஈடாக இறுதி மாதத்தில் நகையை வாங்கிக்கொள்ள முடியும்.
கடந்த சில தினங்களுக்கு முன் குரோம்பேட்டை தனியார் நகைக்கடை கிளை நிறுவனத்தின் கணக்கு சரிபார்க்கப்பட்டது. அப்போது கணக்கில் நான்கு லட்சம் ரூபாய் குறைவதை அறிந்து நிறுவனத்தினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த 2020ஆம் ஆண்டு நகைச் சீட்டுப் பிரிவில் பணியாற்றிய முரளிதரன் (38) என்பவர் நகைக்கடை நிறுவனத்தின் பெயரில் போலியான ரசீது தயார் செய்து அதை வாடிக்கையாளர்களிடம் கொடுத்து வாடிக்கையாளர்கள் அளிக்கும் பணத்தை நிறுவனத்தின் கணக்கில் சேர்க்காமல் நான்கு லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து வந்தது தெரியவந்தது.
இந்த மோசடியில் ஈடுபட்ட முரளிதரன் என்பவர் கடந்த ஆண்டே பணியில் இருந்து விலகி வேறு பணிக்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தலைமை அலுவலகமான தி.நகர் நகைக்கடை நிறுவனத்தின் மேலாளர் மனீஷ் இச்சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் உள்ள தி.நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
சம்பவம் நடந்த இடம் குரோம்பேட்டை என்பதால் புகார் மனுவை பரங்கிமலை துணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்மா உணவகப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்: பெண்கள் சாலை மறியல்