தேனி மாவட்டம் பெரியகுளம் கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகர் (24). இவர், ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடத்தும் திருநெல்வேலி ரமேஷ் என்பவரிடம் கார் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு (பிப். 10) பாலியல் தொழிலுக்காக ஐந்து பேரை காரில் அழைத்துவர சென்னை கொரட்டூர் 100 அடி சாலை டி.ஆர்.ஜே. மருத்துவமனை அருகே நின்றிருந்த சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த லோடுமேன் பிரபு (32), சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உதயகுமார் (32), பாபு (40), சுலைமான் (37), வாப்பா (65) ஆகிய ஐந்து பேரும் அந்தக் காரில் ஏறியுள்ளனர். பின்னர், பிரபு என்பவர் தான் கார் ஓட்டுவதாகக் கூறி காரை எடுத்து வியாசர்பாடி சர்மா நகருக்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து, திருநெல்வேலியில் இருக்கும் காரின் உரிமையாளர் ரமேஷ் என்பவரிடம் செல்போன் வாயிலாகத் தொடர்புகொண்ட அந்தக் கும்பல், தாங்கள் ஐந்து பேரும் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் என்றும், இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால் கார் ஓட்டுநரை விட்டுவிடுவதாக கூறியுள்ளனர். இது குறித்து திருநெல்வேலியில் உள்ள கார் உரிமையாளர் ரமேஷ் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின்பேரில் எம்.கே.பி. நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்றனர். காவல் துறையினரின் வருகையை அறிந்த அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற காவல் துறையினர், இருவரை மடக்கிப் பிடித்தனர்.
மீதமுள்ள மூன்று பேரும் தப்பிச் சென்ற நிலையில் அவர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். மேலும், இருவரை கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கணவரை வழியனுப்ப போலி டிக்கெட்: இளம் பெண் கைது!