அமைச்சர் பிடிஆர் பெயரில் போலி மின்னஞ்சல்: 7 பிரிவுகளின் கீழ் வழக்கு - நிதியமைச்சர் பிடிஆர் பெயரில் போலி மின்னஞ்சல்
சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அவதூறு பரப்பிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டு அரசியல் சாராத இஸ்லாமியர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலி மின்னஞ்சலை நீக்கக்கோரியும் அமைச்சர் சார்பில் சென்னை, அபிராமபுரம் காவல் நிலையத்தில் முன்னதாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில்,
153(a) மதம் ,இனம் அடிப்படையில் இரு பிரிவினரிடையே பகைமையைத் தூண்டுதல்,
295(a) - ஒரு மதத்தினரின் நம்பிக்கையை வேண்டுமென்றே புண்படுத்துதல்,
465 - பொய்யான ஆவணங்கள் தயாரித்தல்,
467 - பெருமதியான பத்திரம் போன்றவற்றை பொய்யாக புனைதல்,
500 - அவதூறு பரப்புதல்,
34 - உள்கருத்துடன் செய்யப்படும் செயல்கள்,
தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66( D) ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் இந்நபர்களைத் தேடி வருகின்றனர்.
ஏற்கெனவே இதே போல் போலி மின்னஞ்சலை உருவாக்கி இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்புவதாக விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் விக்ரமன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார் பிடிஆர்!