சென்னை தாம்பரம் அடுத்த பார்வதி நகர் இளங்கோ தெருவில் வசிப்பவர் ராமச்சந்திரன்(வயது 72). இவரது மனைவி அவையம்பாள் (வயது 65). இவர்களுக்கு 32 வயதில் ஒரு மகனும், 24 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
கடந்த 5 வருடங்களாக தனது மகள் மற்றும் மகன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பல இடங்களில் வரன் பார்த்து வந்தனர். இதுவரை திருமணம் நடக்காததால் பெற்றோர்கள் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி ராமச்சந்திரன் வீட்டுக்கு 25 வயது மதிப்புடைய ஒரு நபர் ஜோசியம் பார்ப்பதாக கூறி வந்துள்ளார். அப்போது அவர், உங்களுக்கு தோஷம் உள்ளது பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.
சூனியம் வைத்திருக்கிறார்கள்
அதன் பிறகு ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து வர சொல்லி பின்னர் சுமார் 1 மணி நேரமாக பூஜை நடத்திய பிறகு சொம்பிலிருந்து சிறு தகடு ஒன்றை எடுத்து காண்பித்து உங்கள் வீட்டிற்கு யாரோ சூனியம் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
உடனே சூனியத்தை நீக்க வேண்டும் இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று கூறியதும் அதை உடனே செய்யுங்கள் என்று தம்பதியினர் கூறியதால் அதற்கு ஜோசியர் 24 ஆயிரம் ரூபாய் பணம் செலவாகும் என்று கூறியுள்ளார். உயிருக்கு பயந்த தம்பதியினர் 24 ஆயிரம் ரூபாயையும் கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர் பணத்தை வாங்கிக்கொண்டு சிறிது நேரத்தில் பூஜை முடிந்ததாகக் கூறி ராமச்சந்திரனின் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு ஜோசியர் சென்றுள்ளார்.
தோஷம் இன்னும் கழியவில்லை
அதன்பிறகு கடந்த ஆறாம் தேதி தம்பதியை தொடர்புகொண்ட போலி சாமியார், தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு உங்களது தோஷம் முழுமையாகக் கழியவில்லை அதற்கு நீங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலி சங்கிலியை கழற்றி பூஜை அறையில் துணியில் மறைத்து வைத்து பூஜை செய்யுங்கள்.
விரைவில் திருவண்ணாமலையிலிருந்து சாமியார் ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்து தோஷத்தைக் கழித்துவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
உடனே 8 சவரன் தாலி சங்கிலி மட்டுமல்லாமல் ஜோசியர் சொன்னதுக்கும் மேலாக 1 மோதிரம், 2 தங்கக் காசுகள் ஆகியவற்றையும் சேர்த்து துணியில் சுற்றி பூஜை அறையில் வைத்து வழிபட்டுள்ளனர்.
தாலி சங்கிலி கொள்ளை
அதன்பிறகு கடந்த 12ஆம் தேதி சாமியார் ஒருவர் ராமச்சந்திரனின் வீட்டிற்கு சென்று ஜோசியர் அனுப்பியதாக கூறியுள்ளார். முன்பு ஜோசியர் சொன்னது போலவே சாமியாரும் ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து வர சொல்லி பூஜை செய்ய தொடங்கினார்.
தொடர்ந்து, பூஜை அறையில் வைத்திருந்த துணியில் சேர்த்து வைத்திருந்த நகைகளையும் அப்படியே எடுத்து சொம்பில் போட சொல்லிவிட்டு குடும்பத்தினர் அனைவரிடமும் வீட்டை மூன்று முறை சுற்றி வருமாறு கூறியுள்ளார்.
மேலும், சொம்பின் மேல் பகுதியை மஞ்சள் துணியால் மூடிவிட்டு மூன்று நாள்கள் கழித்து தாலி சங்கிலியை எடுத்துக் கொள்ளுங்கள் மூன்று நாட்களுக்குள் தோஷம் கழிந்துவிடும் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
நகைகள் மாயம்
இதனையடுத்து கடந்த 15ஆம் தேதி காலையில் சொம்பில் உள்ள தாலி சங்கிலியை எடுத்து பார்த்தபோது நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பதறிப்போன குடும்பத்தினர் இதையெல்லாம் போலி சாமியார்கள் திட்டம்போட்டு செய்தது என்று உணர்ந்தனர்.
பின்னர் இதுகுறித்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.