மருத்துவப் படிப்பில் பொதுப் பிரிவில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு நவம்பர் 23ஆம் தேதி தொடங்கியது. இதில் போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்கின்றனர் என புகார் எழுந்தது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, மருத்துவக் கல்வி துணை இயக்குநர், சட்டம் சார்ந்த மருத்துவர்கள், வட்டாட்சியர் என ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, மாணவர்களின் இருப்பிட சான்றிதழ்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையடுத்து நவம்பர் 23ஆம் தேதி கலந்தாய்வுக்கு வந்த 2 மாணவர்களின் இருப்பிட சான்றிதழில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்களின் சான்றிதழ்கள் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டன. அதேபோல் 30ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக்கு வந்த ஒரு மாணவரின் இருப்பிட சான்றிதழ் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது சான்றிதழும் மறுஆய்வு செய்யப்பட்டது.
இன்று(டிச.1) அன்று நடைபெற்ற கலந்தாய்வுக்கு வந்த மாணவர்களின் ஒரு மாணவர் இரண்டு இடங்களில் இருப்பிட சான்றிதழ் கொடுத்து கலந்தாய்வில் பங்கேற்க வந்தது கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து கலந்தாய்வில் பங்கேற்க வந்த மாணவர்களில் தற்போது வரை எட்டு பேரின் இருப்பிட சான்றிதழ்களில் சந்தேகம் எழுந்துள்ளன.
இருப்பினும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் இதுவரை காவல்துறையில் புகார் தெரிவித்ததாக எவ்விதத் தகவலும் அளிக்கவில்லை. மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு இன்று(டிச.1)நடைபெற்ற கலந்தாய்வுக்கு 452 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 443 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் கலந்து கொண்டனர். ஒன்பது மாணவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு வரவில்லை.
எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 406 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரியில் 23 இடங்கள் என, 429 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். ஒரு மாணவர் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பம் இல்லை என தெரிவித்து சென்றுள்ளார். ஒன்பது மாணவர்கள் தங்களுக்கான இடங்களை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர் என, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
ஆனால் நான்கு மாணவர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது மாணவர்கள் இருப்பிட சான்றிதழ் குளறுபடிகள் கண்டறிப்பட்டுள்ள நிலையில், சட்டம் சார்ந்து ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவக் கலந்தாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அரசு ஒதுக்கீடு இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரத்து 653, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரத்து 37, பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 151, தனியார் மருத்துவக் கல்லூரியில் 985 இடங்கள் காலியாக உள்ளன.
இதையும் படிங்க: 381 எம்பிபிஎஸ் இடங்கள் இன்று நிரம்பின!