கரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மூட வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்த பின்பு தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் தொழிற்பேட்டைகளை இயங்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சென்னையில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சில தளர்வுகளுடன் கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள 17 தொழிற்பேட்டைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் இயங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கியுள்ளார்.
தொழிற்பேட்டைகளை இயக்க சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அந்த பகுதிகளிலேயே உள்ள 25 விழுக்காடு தொழிலாளர்களுடன் செயல்பட வேண்டும். 55 வயதுக்கு மேல் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என நெறிமுறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பின் காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்தல், முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு 4 சிறப்பு ரயில்கள்! தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு