உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கரோனா வைரஸ் (தீநுண்மி) பெருந்தொற்றுநோயின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் அதனைப் பொருட்படுத்தாமல் மீறிவருகின்றனர்.
இதனைத் தடுக்க தமிழ்நாடு காவல் துறை ஆளில்லா விமானங்கள் மூலமாகச் சோதனைகளில் ஈடுபட்டுவருகிறது. மேலும், ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்தும் கண்காணித்துவருகிறது. இருப்பினும், மக்கள் வெளியில் நடமாடுவதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி. ஆய்வை நடத்தி தகவல்களை அளித்துள்ளது.
ஸ்மார்ட்போன்களில் தரவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுவரும் ஃபேஸ்புக் செயலியின் மூலம் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஐ.ஐ.டி. குழு இந்த ஆய்வை நடத்தியுள்ளது. ஃபேஸ்புக்கில் உள்ள ஜிபிஎஸ் தடங்காட்டி தொழில்நுட்பம் இருப்பிடம் அறிதல் (location) என்கிற வசதியின் மூலம் எந்தப் பகுதியிலிருந்து அதனைப் பயன்படுத்துகின்றனர் என்பதைத் திரட்டி வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை ஐ.ஐ.டி. கணினித் துறைப் பேராசிரியர் ரவீந்திரன் கூறியதாவது, “சென்னை ஐ.ஐ.டி. ஃபேஸ்புக் நிர்வாகத்துடன் டேட்டா ஃபார் குட் ( data for good) என்கிற திட்டத்தின்கீழ் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இதன்மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்தும் நபர் எந்தப் பகுதியில் இருந்து அதனைப் பயன்படுத்துகிறார் என்பதை ஃபேஸ்புக்கில் உள்ள இருப்பிடம் அறிதல் வசதியின் மூலம் அறிய முடியும்.
ஊரடங்கை பொருட்படுத்தாது வெளியே மக்கள் எந்தப் பகுதிகளில் அதிகம் நடமாடினார்கள் என்கிற விவரங்களை ஸ்மார்ட்போன்களிலிருந்து தடங்காட்டி தொழில்நுட்பம் கொண்டு திரட்டப்பட்டு ஐ.ஐ.டி. குழு வரைபடம் ஒன்றினை தயாரித்துள்ளது. ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக் வைத்திருப்பவர் எங்கெல்லாம் சென்றுள்ளார் என்ற விவரங்களைத் திரட்டி ஐ.ஐ.டி. குழு வரைபடத் தரவுகளை உருவாக்கி உள்ளது.
இதில் விழுப்புரம், சென்னை, சிவகங்கை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் வார இறுதி நாள்களில் அதிகளவு மக்கள் நடமாட்டம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. வட சென்னை, மத்திய சென்னை, கோயம்பேடு சந்தை ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் ஊரடங்கை பொருட்படுத்தாது அதிகளவு இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஏப்ரல் மாத இறுதி வாரத்தை ஒப்பிடுகையில் இந்த மாதம் 17 விழுக்காடு மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதேபோன்று இரண்டாம்கட்ட ஊரடங்கை ஒப்பிடுகையில் இந்த மாதம் மக்கள் நடமாட்டம் ஏழு விழுக்காடு அளவு அதிகரித்து காணப்படுவதாக ஐ.ஐ.டி. குழு தெரிவித்துள்ளது. தாங்கள் திரட்டிய தரவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையினை தமிழ்நாடு அரசிடம் ஐ.ஐ.டி. குழுவினர் சமர்ப்பித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
ஊரடங்கு உத்தரவை சென்னை மக்கள் மதிக்காமல் வெளியில் சுற்றியதால்தான் சென்னையில் கரோனா நோய்த்தொற்று அதிகம் பரவியிருப்பதாகவும் ஐ.ஐ.டி. குழு கூறுவது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : 'காவல் துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்க!'