சென்னை: தெற்கு ஆசியாவின் முதல்முறையாக முதல் ஃபார்முலா சர்க்யூட் ரேஸிங் போட்டிகள் (F4 Indian Championship and the Indian Racing League) சென்னையில் நடக்க உள்ளது. நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என தைரியமாக கூறும் ஆளுநருக்கு அதிமுக இதுவரை ஒரு கண்டனத்தையாவது தெரிவித்துள்ளதா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில், சென்னையில் நடைபெறவுள்ள தெற்காசியாவின் முதல் ஃபார்முலா சர்க்யூட் ரேஸிங் போட்டிகள் குறித்து, தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் RPPL நிறுவனத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஆக.16) நடைபெற்றது.
தெற்காசியாவின் முதல் ஃபார்முலா சர்க்யூட் ரேஸிங் போட்டிகள்: பெருநகர சென்னை மாநகராட்சி (GCC), சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து நடத்தும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் (Street Circuit) இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு: வெளிநாட்டு தொழில்முறை வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியானது இந்தியாவின் முதல் மற்றும் தெற்காசிய நாடுகளிலேயே முதல் முறையாக நடைபெறும் ஃபார்முலா கார் பந்தயம் ஆகும். மேலும் இரவு நேரங்களில் இது நடத்தப்படுவதும், பொதுப் போக்குவரத்து சாலைகளில் (Street Circuit) பந்தயம் நடைபெறுவதும் இதுவே முதல்முறையாகும். எனவே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை இதற்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்த போட்டிகளை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் நடத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட வரைபடம் வெளியிடப்பட்டது. பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இப்போட்டிக்கான கோப்புகளில் கையொப்பமிட்டார். இதனைத்தொடர்ந்து போட்டிக்கான அதிகாரப்பூர்வப் படத்தை, RPPL நிறுவன அதிகாரிகளுடன் அவர் இணைந்து வெளியிட்டார். தொடர்ந்து மேடையில் பேசியஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'தமிழ்நாட்டில் தொடர்ந்து சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தி வருவதின் அடுத்த நிகழ்வாக, இந்த ஃபார்முலா 4 ரேஸிங் டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படவுள்ளன' என்று தெரிவித்தார்.
ஜெயக்குமார் பூ சுற்றிக்கொள்ளட்டும்: இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'நீட் விவகாரத்தில் (NEET Exam) ஆளுநர் கையொப்பம் இட மறுத்தது குறித்த கேள்விக்கு, இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், நீட் விவகாரத்தில் திமுக உண்ணாவிரதம் மேற்கொள்கிறது என பேசினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீட் விவகாரத்தில் திமுக உண்ணாவிரதம் இருப்பது பொதுமக்கள் காதில் பூ சுற்றும் வேலை என கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையில் பூ வைத்திருந்தால் சுற்றிக்கொள்ளட்டும் என்றார்.
பாஜகவிற்கு எதிராக மூச்சுவிட தயங்கும் அதிமுக: பாஜக பிரதிநிதியான ஆளுநர் உங்களுடைய கூட்டணியில்தானே இருக்கிறார்? நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என தைரியமாக கூறும் ஆளுநருக்கு அதிமுக இதுவரை ஒரு கண்டனத்தையாவது தெரிவித்துள்ளதா? என்று கேள்வியெழுப்பினார். மேலும் பேசிய அவர், மத்திய பாஜக அரசை எதிர்த்து மூச்சாவது விட முடியுமா? என்றும் நீட் விவகாரத்தில் திமுக தொடர்ந்து மாணவர்கள் பக்கம் நிற்கும் என்றும் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை-மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!