காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.
அதனை தொடர்ந்து, சென்னையின் முக்கிய இடமான புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி ராமசந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே டிஎஸ்பி முருகன் தலைமையில் காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்பு படையினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,'அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி ராமசந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 108 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 205 ரயில்வே காவலர்கள், 100 ரயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், , சந்தேகத்திற்கிடமான வகையில் யாரேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக 1512 அல்லது 182 என்ற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள துப்புரவு பணியாளர்கள், சுமைதூக்கும் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோரிடம் பாதுகாப்பு தொடர்பாக ஒத்துழைப்பு அளிக்க கோரியுள்ளதாக தெரிவித்தார். முன்னதாக மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் ரயில் நிலையம் முழுவதும் உள்ள பயணிகளின் உடமைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.