சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள மின் நுகர்வோர் தங்களின் மின்சார இணைப்பு அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென மின்சாரத்துறை கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பினை வெளியிட்டது. நவம்பர் 28ஆம் தேதி முதல் பொது மக்கள் மின்சார எண்ணுடன் ஆதார் எண்ணை மக்கள் இணைக்கத் துவங்கிவிட்டனர்.
மேலும் மின்சார எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்தமாதம் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டுமென கால அவகாசத்தை மின்சாரத்துறை அறிவித்திருந்தது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 2.33 கோடி பேர் மின்சாரத்துறை மூலம் மின்சாரம் பெற்று வருகின்றனர். அதில், தற்போது வரை 1.50 கோடி பேர் அவர்களின் மின்சார எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர்.
இரண்டு நாட்களில் மின்சார வாரியம் விடுத்த காலக்கெடு நிறைவடையும் நிலையில், மீதமுள்ள 75 லட்சம் பேர் இணைக்காமல் இருப்பதால், மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்குவது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு, மேலும் ஒரு மாத கால அவகாசம், மின்சார எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு கேட்டு வழக்கு: தமிழக அரசு கூறியது என்ன?