சென்னை: அதிமுகவிலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஒ.பி.எஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நவம்பர் 16இல் விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக இன்று (டிச.11) விசாரணக்கு வந்தது. அப்போது, இரு தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி சதீஷ்குமார், வழக்கின் விசாரணையை டிசம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அதுவரை ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடரும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பூரண உடல் நலம் பெற்று விஜயகாந்த் வீடு திரும்பினார்: சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை!