சென்னை: நடப்பு ஆண்டின் இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றைய முன்தினம் (அக்.9) தொடங்கிய நிலையில், இன்றுடன் (அக்.11) முடிவடைகிறது. இந்த நிலையில், கேள்வி பதில் நேரம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடைபெற்று வந்தது. இதனிடையே, எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக அதிமுக தரப்பில் முன் வைக்கப்பட்டது.
இதனையடுத்து, எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக பேசுவதற்கான நேரம் இதுவல்ல எனவும், அது சபாநாயகரின் தனிப்பட்ட முடிவு எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மேலும், எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் என்பதை தான் மறுக்கவில்லை எனவும் அப்பாவு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவுவின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுகவினர், அமளியில் ஈடுபட்டனர். மேலும், சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து, அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
மேலும், இனி அதிமுகவினர் அவையில் இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்பாவு எச்சரித்து உள்ளார். அது மட்டுமின்றி, ஒருவர் எந்த சின்னத்தில் வெற்றி பெற்றாரோ, அந்த சின்னத்தில்தான் அவரை கடைசி வரை பார்க்க முடியும் எனவும், சட்டப்படியே நடவடிக்கை எடுத்ததாகவும், வீம்புக்காக செய்யவில்லை எனவும் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே, எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக இதுவரை 10 முறை கோரிக்கை வைத்ததாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும், உட்கட்சி பிரச்னையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: “அத்திக்கடவு அவிநாசி திட்டம் 2 அறிக்கை தயார்” - அமைச்சர் துரைமுருகன் தகவல்!