கரோனா வைரஸ் ஊரடங்கால் சென்னை விமானநிலையத்தில் பயணிகள் விமானசேவைகள் கடந்த 8 மாதங்களாக கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
சா்வதேச விமான சேவைகளை பொறுத்தமட்டிலும் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியா்களை மீட்டு அழைத்துவரும் சிறப்பு மீட்பு விமானங்களும், மற்றும் மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று மருத்துவம், வேலை, அத்தியாவிசய பணி, வெளிநாடு வாழ் இந்தியா்களுக்காக சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
உள்நாட்டு பயணிகள் விமானங்கள் சுமாா் 50 விழுக்காட்டிற்கு குறைவாகவே இயக்கப்படுகின்றன. சென்னை விமானநிலையத்தில் சரக்கு விமான சேவைகள் ஊரடங்கு தொடங்கிய முதல் 2 மாதங்களில் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் ஊரடங்கில் தளா்வுகள் கொடுக்க தொடங்கிய பின்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கி தற்போது வழக்கமான சரக்கு விமான சேவைகள் நடைபெறுகின்றன.
சென்னை சா்வதேச சரக்ககப்பகுதியில் ஏற்றுமதி, இறக்குமதிகள் முழு வேகத்தில் நடைபெறுகின்றன. பயணிகள் விமானங்களாக இயக்கப்பட்ட பல விமானங்கள், பயணிகள் போக்குவரத்து இல்லாததால், தற்போது சரக்கு விமானங்களாக இயக்கப்படுகின்றன.
சென்னை விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூா், துபாய், மலேசியா, கத்தாா், ஓமன், சாா்ஜா, குவைத், சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜொ்மன், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினமும் 20க்கும் மேற்பட்ட சரக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இங்கிருந்து ஆடைகள், பதப்படுத்தப்பட்ட தோல்கள், உணவு பொருட்கள், காய், பழங்கள், ஆபரணங்கள், ரசாயண பொருள்கள், பலவகை இயந்திரங்கள் உள்பட பல்வகை பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. அதேப்போல் மின்ணனு சாதனங்கள், ரசாயண கலவைகள், மருத்துவ பொருள்கள், கம்யூட்டா் உதிரிப்பாகங்கள், ரசாயண உரங்கள், ஆட்டோமொபல்ஸ் உதிரி பாகங்கள் உட்பட பல்வேறு பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
கரோனா வைரஸ் ஊரடங்கால் சற்று தேக்கமடைந்திருந்த ஏற்றுமதி, இறக்குமதி தற்போது மீண்டெழுந்து வேகமெடுத்துள்ளது. இந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் மட்டும், சென்னை விமானநிலையத்திலிருந்து 29,132 டன் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாகியுள்ளன.

இது கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தைவிட 380 டன் அதிகமாகும். கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் 28,752 டன் பொருள்கள் மட்டுமே ஏற்றுமதியானது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கரோனா வைரஸ் ஊரடங்கால் நாடே முடங்கியுள்ள இந்த காலக்கட்டத்திலும் சென்னை விமான நிலைய சா்வதேச சரக்ககத்தில் ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகள் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. தொழில்துறை மற்றும் உற்பத்தியாளா்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று சென்னை விமானநிலைய அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனா்.
