சென்னை பல்லாவரத்தில் உள்ள சங்கர் நகர் 22ஆவது தெருவில் பழைய காவல் நிலையம் அருகில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் வழக்கமாக அங்குதான் குப்பைகளை கொட்டுவார்கள்.
இந்நிலையில், இன்று காலை நகராட்சியிலிருந்து குப்பைகள் அள்ளுவதற்காக ஊழியர்கள் வந்தனர். அப்போது, குப்பைகளை அள்ளுகையில் திடீரென்று மர்ம பொருள் ஒன்று வெடித்தது. இந்த வெடி விபத்தில் நகராட்சி ஊழியர் தேவகி என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சங்கர் நகர் காவல் துறையினர், காயம் அடைந்த தேவகியை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த தடயவியல் ஆய்வு அறிவியல் நிபுணர் சோபியா ஆய்வு செய்ததில், குப்பைகளுக்கு நடுவில் ஒயிட் பாஸ்பரஸ் இருப்பது தெரியவந்தது.
பின்பு, ஜே.சி.பி இயந்திரம் மூலம் அதனை அப்புறப்படுத்தும்போது ஒயிட் பாஸ்பரஸ் துண்டுகள் அதிக சத்தத்துடன் ஐந்து முறை வெடித்துள்ளன.
இந்நிகழ்வை அடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் நடமாடகு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, காவல் துறையினர் ஒயிட் பாஸ்பரஸ் அப்பகுதிக்கு எப்படி வந்தது என தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வில்சன் கொலை வழக்கு - மூன்று பேர் சிறையில் அடைப்பு!