சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர் பதவிக்காலம் ஆறு மாதம் நீட்டிப்பு செய்வது தொடர்பான சட்டமுன்வடிவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேரவையில் அறிமுகம் செய்து இருந்தனர்.
இந்த சட்டமுன்வடிவுகள் மற்றும் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிர்வாகத்தில் பொருளாதார பொறுப்புடைமை திருத்த சட்டமுன்வடிவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் 2018 மற்றும் 19ஆம் ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை அறிக்கையும் பேரவையில் வைக்கப்பட்டது.
சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்திய அமைச்சர்கள்
மாநகராட்சி, நகராட்சி திருத்த சட்டமுன் வடிவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று (ஜூன் 23) தாக்கல் செய்தார். ஊராட்சிகள் திருத்த சட்டமுன்வடிவை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேரவையில் அறிமுகப்படுத்தினார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலை நடத்துவதற்கும் மாநிலத்தேர்தல் ஆணையம் தயாரானது. கரோனா திடீர் பரவல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை தணிப்பதற்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மறு சீரமைக்கப்பட்ட 9 மாவட்டங்களின் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தேர்தல் பணிகளை திட்டமிட்டப்படி நிறைவு செய்யமுடியவில்லை.
தேர்தல் நடத்த மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், தற்போது பணியில் உள்ள தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தனி அலுவலர்களின் பதவி காலத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டமுன்வடிவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
கூடுதல் கடன்பெற வழிவகை பரிந்துரை
15ஆம் நிதிக்குழுவானது தனது 2021-2025க்கான அறிக்கையில், எரிசக்தித்துறை குறித்த சில செயல்திறன்
அளவுகோலின் அடிப்படையில் 2021-2022 முதல் 2024-2025 வரையிலான கால அளவினை உள்ளடக்கிய பரிந்துரை 0.05 விழுக்காடு அளவு கூடுதல் கடன் பெறுவதற்கான வழிவகைக்கு பரிந்துரைத்துள்ளது.
மேலும், நிதிக்குழுவானது, மொத்த மாநில உற்பத்தி மதிப்பீட்டிற்கு நிகர கடன் பெறுதலுக்கான வரம்பினை 2021-2022 , 2022-2023 மற்றும் 2023-2024 முதல் 2025–2026ஆம் ஆண்டுகளில் முறையே 4 விழுக்காடு, 3.5 விழுக்காடு மற்றும் 3 விழுக்காடாக பரிந்துரைத்துள்ளது.
நிதிக்குழுவின் மேற்சொன்ன பரிந்துரைகளின் அடிப்படையில், வருவாய்ப் பற்றாக்குறையை நீக்குவதற்கும், நிதிநிலை பற்றாக்குறையை மொத்த மாநில உற்பத்தி மதிப்பீட்டில் மூன்று விழுக்காடு வரை குறைப்பதற்குமான காலவரம்பினை குறித்தபடி 2024 மார்ச் 31 வரை நீட்டிக்க, 2003ஆம் ஆண்டு நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்புடைமைச் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 16/2003) திருத்தம் செய்யும் சட்டமுன் வடிவு இன்று பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனை நிதி அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: அறவழியில் போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் வாபஸ் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு