சென்னை: நீட் தேர்வினால் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர் எனவும், அரசுப்பள்ளிகளில் கட்டமைப்பு உடனடியாக வலுப்படுத்த வேண்டும் என குடியரசுத் தின வாழ்த்து செய்தியில் ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருந்தார்.
இது குறித்து கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பொதுப்பள்ளிக்கான மாநிலமேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, "தமிழ்நாடு ஆளுநரின் நீட் குறித்த செய்தி மக்களாட்சி, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கிறது.
7.5% உள் ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது நேர்மையற்றது
சாதியெனும் பாகுபாடு கொண்ட சமூகக் கட்டமைப்பைத் தகர்த்திட வேண்டிய அவசியத்தைப் பற்றி ஆளுநரின் அறிக்கை பேசவில்லை. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, அதிகக் கட்டணம் வசூலிக்கும் மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் பெரும்பகுதி சமூகப் படிநிலையில் உயர் வகுப்பைச் சார்ந்தவர்கள்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பகுதியினர் சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்தவர்கள். சமூக, கல்விப் பின்புலமே கற்றல் வாய்ப்புகளை தீர்மானிக்கிறது.
அரசின் பொறுப்பிலும், செலவிலும் பொதுப் பள்ளி முறைமையை உருவாக்குவதின் மூலமே இத்தகைய பாகுபாட்டைக் களைய முடியும். ஆனால் ஆளுநர் இது குறித்து எதுவுமே பேசவில்லை. நீட் தேர்வுக்கு முன்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு கிடையாது.
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகுதான் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. உள் ஒதுக்கீடு இல்லாத காலத்தில் நடந்த மாணவர் சேர்க்கையை, உள் ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும் போது நடக்கும் மாணவர் சேர்க்கையுடன் ஒப்பிட்டு நீட் தேர்வுவை நியாயப்படுத்த முயல்வது முற்றிலும் நேர்மையற்ற அணுகுமுறை.
மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்த தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றிய சட்ட முன் வடிவைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பாமல் தானே பல மாதத்திற்கு மேல் வைத்திருப்பதை நியாயப்படுத்த குடியரசு தினச் செய்தியைப் பயன்படுத்தியிருக்கிறார் ஆளுநர்.
மக்களாட்சியில் மக்களே இறுதி இறையாண்மை கொண்டவர்கள். மக்களின் வாக்குகள் மூலமே அரசு உருவாகிறது. தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் தரும் தேர்தல் அறிக்கை மக்களுக்குத் தரும் வாக்குறுதி. வாக்குறுதியில் இடம் பெற்றுள்ள கொள்கைகள், திட்டங்களை ஏற்றுக் கொண்டுதான் மக்கள் தங்கள் வாக்கை அளிக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்குத் தேர்தலில் தரப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது.
ஆளுநர் பதவி விலகுக
மக்களாட்சி மாண்புகளுக்கு மதிப்பளிக்காமல் மாநிலச் சட்டப் பேரவையைச் சிறுமைப்படுத்துகிறார் ஆளுநர். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் மாண்டேகு - செம்ஸ்போர்டு 1919இல் பரிந்துரைத்த இரட்டையாட்சி முறையை எதிர்த்துப் பலரின் உயிர்த்தியாகத்தால் இந்தியா விடுதலை பெற்றது. மீண்டும் காலனிய காலத்திற்குத் தமிழ்நாட்டைப் பின்னுக்கு இழுக்கப் பார்க்கிறார் ஆளுநர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை ஏற்று தமிழ்நாடு ஆளுநர் செயல்பட வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தையும், மக்களாட்சி மாண்புகளையும் அடிப்படைக் கோட்பாடாகக் கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கியுள்ள இந்திய குடியரசைக் காக்கின்ற கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான சட்ட முன் வடிவைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்ப வேண்டும் அல்லது அவர் பதவி விலக வேண்டும். மேலும் சமமான கற்றல் வாய்ப்பை கொடுக்கும் பள்ளிகளை உருவாக்க வேண்டும்.
அரசினால் தான் ஒரு குழந்தைக்கு கண்ணியமிக்க குழந்தைப் பருவத்தை உத்தரவாதப்படுத்த முடியும். அரசமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதல் படி அரசின் வருவாய் பெருக பெருக கல்விக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என ஆளுநர் பேசி இருந்தால் அவர் அரசமைப்பு சட்டத்தின் படி செயல்படுகிறார் என எடுத்துக் கொள்ளலாம்.
கோச்சிங் சென்டர்களுக்கு கோடிக்களில் லாபம்
ஒரு புறம் நீட் தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், மறுபுறம் கல்வி நிலையங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் கூறுகிறார். இதில் அவர் கூற வருவதை தெளிவுப்படுத்த வேண்டும். சமமற்ற கற்றல் சூழல் மாறி, எல்லா குழந்தைகளுக்கும் சமமான கற்றல் சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும். இதற்கு பொதுப்பள்ளி முறைதான் சாத்தியம்.
ஒரு குடும்பம் தனது குழந்தைக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதற்கே திணறும் நிலையில், பள்ளியில் சேர்த்தால் மட்டும் போதாது. கோச்சிங் கட்டணமும் செலுத்த வேண்டும் என கூறுகிறது. மாநில அரசின் தேர்வு செல்லாது என செல்லப்படுகிறது. ஒரு ஏஜென்சி நடத்தும் தேர்வுதான் தகுதி எனக் கூறினால், கோச்சிங் சென்டருக்கு போக வேண்டி நிலை இருக்கிறது.
நீட் தேர்விற்கு 2 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்தாலும், ஒரு லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு பயிற்சிக்கு பணம் செலுத்துகின்றனர். ஆனால், மருத்துவ படிப்பில் 10 ஆயிரம் இடங்கள் தான் உள்ளன. தேர்வு பெறாதவர்கள் மீண்டும் முயற்சி செய்வார்கள்.
தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களுக்கு போக முடியாதாதல் விலகுகின்றனர். அடுத்த முறை நீட் தேர்வுக்கு தயராவதற்காக மீண்டும் கோச்சின் சென்டரை நாடுகின்றனர். பல லட்சம் செலவிட வேண்டியிருக்கிறது, குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்படுகிறது. நீட் தேர்வால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். கோச்சிங் சென்டர்கள் கோடிக்கணக்கில் லாபம் கொழிக்க வழிவகுக்கிறது.
நீட் தேர்வால் மட்டும் தான் தரமான மருத்துவர்கள் உருவாக்க முடியும் என்பது இல்லை. நீட் தேர்விலிருந்து இந்தியாவிற்கு விலக்கு வேண்டும். குறைந்தப்பட்சம் தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டதால், தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலே மாணவர் சேர்க்கை வேண்டும்
தொடர்ந்து கல்வியாளர் விஜயன் கூறும்போது, "தமிழ்நாடு ஆளுநரின் கருத்தின் படி அரசுப்பள்ளிகளின் தரத்தினை உயர்த்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பழைய பாடத்திட்டத்தை ஒப்பிடுகையில் தற்போது உள்ள பாடத்திட்டத்தின் தரம் உயர்ந்திருக்கிறது. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்திறன்கள் உள்ளன. அந்தத் தனித்திறன்கள் வெளிப்படும் வகையில் கற்றல் கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
பிறக்கும் குழந்தைகள் அனைவரும் அறிவாற்றல் மிகுந்த குழந்தைகள் தான். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் நன்கு திறமையானவர்கள் எனக் கூற முடியாது. அந்தப் பள்ளிகளில் குழந்தைகளின் திறன்களை கண்டறிந்து 6ஆம் வகுப்பு முதல் கற்பித்து வருகின்றனர். இதனால் அவர்கள் 12ஆம் வகுப்பு வரும் போது போட்டித் தேர்விற்கு தயாராக இருக்கின்றனர். நீட், ஜெஇஇ போன்ற போட்டித் தேர்வுகளில் 60 விழுக்காடு 11ஆம் வகுப்பு பாடத்தில் இருந்து வருகிறது. மாணவர்களுக்கு நன்றாக நுணுக்கங்கள் புரியும் படி கற்பித்தால் எளிதாக தேர்ச்சி பெறுவார்கள்.
கல்வியாளர் என்ற முறையில் நீட், ஜெஇஇ தேர்வுகள் தற்பொழுது உள்ள பாடத்திட்டத்தில் இருந்து தான் 95 விழுக்காடு கேள்விகள் வருகின்றன. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் மாணவர்கள் சிந்தித்து பதிலளிக்கும் வகையில் தான் உருவாக்கப்படுகின்றன. இந்தநிலையில் அதே போன்று மற்றொரு தேர்வு தேவையில்லை. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பொறியியல், மருத்துவம், உயர்கல்வியில் சேர்க்கை வழங்க வேண்டும். இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைக்கப்படும். தேவையற்ற செலவுகளும் குறையும்.
மாணவர்கள் மீண்டும் மீண்டும் ஒரு பாடத்தை படிக்கும் போது எந்த முட்டாளும் மதிப்பெண் பெறுவார்கள். துரதிஷ்டமாக கோச்சிங் சென்டர்களில் தொடர்ந்து திருப்பி திருப்பி தேர்வினை வைத்து, புரிந்துக் கொள்ளும் அறிவு இல்லாவிட்டாலும், அதிகளவில் மதிப்பெண்களை பெறுகின்றனர். அதே நேரத்தில் எந்தவிதமான சிறப்பு பயிற்சியும் இல்லாமல் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் சிறந்தது. மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி பெறும் மதிப்பெண்கள் சிறந்தது இல்லை" எனத் தெரிவித்தார்.
10 ஆயிரம் இடங்களுக்கு லட்சம் பேர் போட்டி
மாணவர், பெற்றோர் நல சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வீர பெருமாள் கூறும்போது, "மருத்துவப்படிப்பில் 10 ஆயிரம் இடங்கள் இருக்கும் போது, 1 லட்சம் பேர் எழுதினாலும், 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே இடங்கள் கிடைக்கும்.
மீதமுள்ள 90 ஆயிரம் பேருக்கு இடங்கள் கிடைக்காது. இது மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாகும் படிப்பாக இருக்கிறது. நீட் தேர்வு மன அழுத்தம், இறுக்கம், போட்டியை உருவாக்குகிறது. மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுபவர்களைத் தடுக்க முடியாது. நீட் தேர்வால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இறுக்கத்தை உருவாக்கிறது. எனவே நீட் தேர்வு தேவையில்லை.
மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சமூகப் பொருளாதார நிலை, சமூகப்பின்னணியை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வது கிடையாது. சமூகத்தில் வாய்ப்பு இருப்பவர்களையும், வாய்ப்பு மறுக்கப்பட்டவரையும் ஒன்றாக பார்க்க முடியாது.
விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்
அரசுப் பள்ளியின் கட்டமைப்பை மத்திய, மாநில அரசுகள் உயர்த்த வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கான நிதியை மத்திய அரசு அளிக்கவில்லை என கூறுகின்றனர். எனவே அந்த நிதியை அளிக்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசின் மீது கணிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.
மாநில அரசு உருவாக்கிய சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டிய மத்திய அரசு எதிர்ப்பு நிலையை காட்டி வருகிறது. மாநில அரசு இயற்றிய நீட் விலக்கு மசோதா மீது தமிழ்நாடு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இல்லம் தேடி கல்வி - 'தன்னார்வலர்களை கொண்டு கற்பித்தல் கன்னியமானதாக இருக்காது'