சென்னை: தமிழ்நாட்டின் மாநிலப் பாடத்திட்டத்தில், 10,11 ஆம் வகுப்புகளில் படித்த மாணவர்களின் விபரங்களை, வரும் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து தெரிவிக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக, 2020-21ஆம் கல்வி ஆண்டில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களில் ’தேர்ச்சி’ என்று மட்டுமே குறிப்பிட்டு வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்களை வழங்குவதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. முன்னதாக, பொதுத் தேர்விற்காக அக்டோபர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தும்.
அதன் அடிப்படையில், மாணவர்களின் விபரங்களுடன் அரசு தேர்வுத் துறைக்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்வார்கள். தொடர்ந்து, அவர்களின் விபரத்தை தேர்வுத்துறை பதிவு செய்து, மாணவர்களுக்குத் தேர்வுக்கான பதிவு எண்களை வழங்கும். அதன் அடிப்படையில் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
கரோனா தொற்று காரணமாக, 2020-21ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி, 10,12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
அதைப் போல 9,10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. கரோனா இரண்டாவது அலையால் மார்ச் 20ஆம் தேதி 9,10,11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.
இதனால் மாணவர்களுக்கான தேர்வு பதிவு எண்களை அரசு தேர்வுத்துறையால் வழங்கமுடியவில்லை. இந்நிலையில், 10,11ஆம் வகுப்புகளில் படித்த மாணவர்களின் விபரங்களை, வரும் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து தெரிவிக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதன் அடிப்படையில் தான் 10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி என மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடக்கக் கல்வி இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!