சென்னை: இன்று (23.09.2022) சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற “தொகுப்பு நிதியின் மாநில நிர்வாகக் குழு” கூட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.
முன்னாள் படைவீரர் நலனில் காட்டிய முன்முயற்சி மற்றும் தனிப்பட்ட நலன்களுடன், முன்னாள் ராணுவ வீரர்களின் நலனை உறுதி செய்வது குறித்தும், முந்தைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் குறிப்புகள் குறித்தும் விவாதிக்க ராஜ்பவனில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், 2014-15 நிதியாண்டு முதல் 2021-22 வரையிலான தொகுப்பு நிதியின் செயல்பாடுகள் குறித்த பரிந்துரைகள் மற்றும் அறிக்கை மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்த குறிப்புகள் விவாதிக்கப்பட்டன.
மேலும், முன்னாள் ராணுவ வீரர்களின் பல்வேறு பிரச்னைகள், அவர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தை (ECHS) மேம்படுத்துதல், கல்வி உதவித்தொகை மானியம் மற்றும் பிற பணப் பலன்களை அவர்களது வாரிசுதாரர்களுக்கு அளித்தல், மாவட்ட அளவில் ‘ஜவான்ஸ் பவன்’ அமைத்தல் போன்றவை விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.
1. போரில் உயிரிழப்போரின் உறவினருக்கு வழங்கப்படும் (NOK) உதவித்தொகையை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், போரில் ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ. 50,000-இருந்து ரூ. 1,00,000/- ஆகவும் உயர்த்துதல்.
2. முன்னாள் படைவீரர்கள்,விதவைகளின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முன்னாள் படைவீரர் குழந்தைகள் கல்வியறிவு மேம்பாட்டு உதவித்தொகையை உயர்த்துதல்
உயர்த்தப்பட்ட உதவித்தொகையின் படி
1 முதல் 5ஆம் வகுப்பு
2,000
6 முதல் 8ஆம் வகுப்பு
4,000
9 & 10ஆம் வகுப்பு
5,000
11 & 12ஆம் வகுப்பு
6,000 வழங்கப்படும்.
3. ஐஐடி/ஐஐஎம் மற்றும் தேசிய சட்டப் பள்ளிகளில் படிக்கும் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு மற்ற உதவித்தொகைகளுடன் சேர்த்து ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு தலா ரூ.50,000 ஊக்கத்தொகை.
4. சைனிக் பள்ளிகளில் படிக்கும் முன்னாள் ராணுவத்தினர், விதவைகளின் குழந்தைகளுக்கு ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.25,000/- ஊக்கத்தொகை.
கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள், போர் விதவைகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள், அவரது நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டது.
முடிவில், முன்னாள் படைவீரர்களின் மீள்குடியேற்றம் பாதுகாப்புக் காவலர், ஓட்டுநர் போன்றோரின் அனுபவங்கள் மற்றும் சேவைகளை சிறந்த முறையில் பயன்படுத்தக்கூடிய சாத்தியமான பகுதிகளை ஆராயுமாறு குழு உறுப்பினர்களையும், அதிகாரிகளையும் ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
முன்னாள் படைவீரர்களுக்குத் திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுக் கல்வியை வழங்குவதற்கான மிகவும் புதுமையான அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டினார். முன்னாள் படைவீரர்களின் நலன், தகுந்த திறன், முறையான சுகாதார வசதிகளுடன் கூடிய மீள்குடியேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்க ஆளுநர் வலியுறுத்தினார்.
கூட்டத்தில் அரசு தலைமைச் செயலரும் குழுவின் துணைத் தலைவருமான வி. இறையன்பு, . டி.ஜெகநாதன், அரசுச் செயலாளர் (பொதுத்துறை), மேஜர் ஜெனரல் எஸ்.எஸ். தஹியா, எஸ்.எம்., வி.எஸ்.எம்., தலைமை தளபதி, தக்ஷின் பாரத் பகுதி, ஆளுநரின் முதன்மைச் செயலர் ஆனந்தராவ் வி.பாட்டீல், உயர் ராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர்கள் நல வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்குப்பிறகு 955 உதவிப்பேராசிரியர்கள் பணி நிரந்தரம்