சென்னை: கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-2012ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களையும், மூன்று வங்கிக் கணக்குகளையும் முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.
வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், “முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில்தான் எனது எம்எல்ஏவுக்கான சம்பளத்தையும், தொகுதிக்கான நலத்திட்ட நிதிகளையும் பெறுகிறேன்.
வருமான வரித்துறையால் அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், எனது தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், “ மனு தொடர்பாக நாளை (நவ 30) வருமான வரித்துறை பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு இல்லத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது