சென்னை: மலேசியாவைச் சேர்ந்த சினிமா துணை நடிகை ஒருவர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கொடுத்த பாலியல் புகாரில், பாலியல் வன்கொடுமை, கட்டாயக் கருக்கலைப்பு உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்த ஆதாரங்களைத் திரட்டி வரும் அடையாறு மகளிர் காவல் துறையினர், சாட்சியங்களைக் கண்டறிந்து வாக்குமூலம் பெறும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் வழக்குப் பதியும் போதும் குடும்பத்துடன் மதுரையில் இருந்துள்ளார். அதற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் மட்டும் ராமநாதபுரம் திரும்பிய நிலையில், மணிகண்டன் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை. இந்நிலையில், சென்னையில் இருந்து ராமநாதபுரம் விரைந்துள்ள தனிப்படை இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்களை திரட்டத் திட்டமிட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் மணிகண்டன் அடிக்கடி சென்று தங்கியிருப்பார் எனக் கூறும் காவல் துறையினர், அங்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர். மருத்துவரான மணிகண்டன், தான் கருத்தரிக்கமால் இருக்கவும், கருவை கலைக்கவும் ராமநாதபுரத்தில் இருந்துதான் மாத்திரைகளை வரவழைத்து கட்டாயப்படுத்தி தருவார் என நடிகை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அது குறித்தும் விசாரிக்கவும் மணிகண்டன் குடும்பத்தினர், அவரது உதவியாளர்களிடம் விசாரணை நடத்தவும் தனிப்படை காவலர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், உதவியாளர்களின் செல்போன் எண்களுக்கு மணிகண்டன் அவ்வப்போது பேசியுள்ளார் என்பதை கண்டுபிடித்துள்ள காவல் துறையினர், மதுரையில் இருந்து மணிகண்டன் சென்னை வந்து ததலைமறைவாக இருப்பதாக சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள அவருக்கு நெருங்கிய நண்பர்கள் யார் யார் என்பதனை கண்டறியும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அரசுக்கு துரோகம் செய்தார் : சாந்தினி - மருத்துவர் தொலைபேசி உரையாடல்