சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கேரள சமாஜ் அரங்கத்தில் 'அரசியலமைப்பைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம்' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசினார்.
இதில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் ராஷ்மித்தா சந்திரன், சிபிஎம் மத்திய சென்னை செயலாளர் செல்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் ப. சிதம்பரம் பேசுகையில், "தற்போது நடைபெற்றுவரும் போராட்டம் இஸ்லாமிய மக்களுக்கும், இந்திய அரசிற்கும் நடப்பது அல்ல; அரசியலமைப்பைக் காக்க வேண்டும் என்பதற்காக இந்திய மக்களுக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ்-க்குமிடையே நடப்பதாகும்.
அஸ்ஸாமில் என்பிஆர் அமல்படுத்தியதன் மூலம் 19 லட்சம் பேரை வெளியேற்ற வேண்டிய நிலை வந்தது. இதில் 12 லட்சம் பேர் இந்துக்கள், ஏழு லட்சம் பேர் இஸ்லாமியர்கள் என்று தெரிந்த பின்னர் மத்திய அரசிற்கு ஒரே திண்டாட்டம். உலகில் எந்த ஒரு நாடும் 19 லட்சம் பேரை நாட்டை விட்டு வெளியேற்றியதில்லை.
வேண்டுமென்றால் நாளை இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். அவர் மெக்ஸிகோவிலிருந்து ஒருவரை வெளியேற்ற முடியவில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்தியாவில் இருக்கும் மக்களுக்குப் பாதிப்பில்லை என்பது முற்றிலும் பொய். தவறு செய்தால் திருத்திக் கொள்ளலாம், ஆனால் பொய்யை மீண்டும் மீண்டும் கூறினால் என்ன செய்வது.
இந்திய அரசிலமைப்புச் சட்டப்படி மதத்தின் அடிப்படையில் பாகுபாடு செய்யக்கூடாது என்பதுதான் உள்ளது. 70 வருடங்களில் முதல்முறையாக மதத்தின் அடிப்படையில் பாகுபாடு செய்யும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்றே நாள்களில் இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனப்படி குடியுரிமை என்பது மண்ணை சார்ந்ததே தவிர மதத்தைச் சார்ந்தது அல்ல; அதுதான் ஜனநாயக நாட்டின் குடிமக்கள் ஏற்றுக்கொண்ட ஒன்று. எவ்வளவு அகந்தை, அகங்காரம் இருந்தால் 70 ஆண்டுகள் உள்ள அரசியல் சாசனத்தை மாற்றியுள்ளனர். நமக்கு அண்டை நாடுகள் மூன்று தானா?
ஏன் இலங்கை, சீனா, பூடான், மியான்மர் கண்ணுக்குத் தெரியவில்லையா? இந்துக்களை அனுமதிக்கும் நீங்கள் ஏன் இலங்கைத் தமிழ் இந்துக்களை அனுமதிக்கக் கூடாது. ஆர்எஸ்எஸ், பாஜக பல விஷக்கருத்துகளைப் பரப்புகின்றன. மதத்தின் அடிப்படையில் மட்டுமா துன்புறுத்தல் உள்ளது. மொழி, இனம் அடிப்படையில் துன்புறுத்தல் நடைபெறவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஒளவையாரின் பொன்மொழியை குறிப்பிட்டு பேசிய மோடி!